Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இருங்காட்டுக்கோட்டையில் ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோட்டிக் இயந்திர உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.6.2025) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots SE) நிறுவனம், 300 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சி (Internship) அளிப்பதற்கான கடிதங்களை வழங்கினார்.

மேலும், இராணிப்பேட்டை சிப்காட்டில் SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 175 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள காற்று பிரித்தெடுப்பு (Air Separation) ஆலையையும் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, 2024-25 ஆம் ஆண்டில் 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இது, கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சியாகும்.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு, அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அஜைல் ரோபோட்ஸ் SE நிறுவனம்;

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் SE நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறை தானியங்கு தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், தற்போது, அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை, காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது. இத்திட்டத்தில், 300 கோடி ரூபாய் முதலீட்டில் 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காற்று பிரித்தெடுக்கும் ஆலை;

SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இத்தாலி நாட்டைச் சேர்ந்த SOL SpA மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும். இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இந்நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, 100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது 200 கோடி ரூபாய் முதலீடு என்ற வகையில், இந்நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தின் காற்று பிரித்தெடுப்பு (Air Separation) ஆலை அமைப்பதற்கு முதலமைச்சர் அவர்களால் கடந்த 19.07.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது பணி நிறைவடைந்து, 175 கோடி ரூபாய் முதலீட்டில், காற்று பிரித்தெடுக்கும் ஆலை நிறுவப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது உறுதியளித்த முதலீடுகள் இதில் அடங்கும். 20 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு ஆலைகளும் முதலமைச்சரால் இன்றையதினம் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் பு.அலர்மேல்மங்கை, அஜைல் ரோபோட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரோரி சாக்ஸ்டன் மற்றும் இந்திய செயல்பாடுகள் மேலாண்மை இயக்குநர் சரவணன் சோலையப்பன், SOL இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் அல்டோ ஃப்யுமகல்லி ரொமாரியோ, திட்டத் தலைவர் கைலியோ லாவ் ஃப்யுமகல்லி ரொமாரியோ, SOL இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.வி.வெங்கடேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.