Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சேலத்தில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையன் மேலும் ஒருவரை கொன்றது அம்பலம்

சேலம்: சேலத்தில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையன் மேலும் ஒருவரை கொன்றது அம்பலமாகியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி உப்புபள்ளத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜனகராஜ் மனைவி சரஸ்வதி (60). இவர், கடந்த 20ம் தேதி வனத்தை ஒட்டிய தோட்டத்தில் காது, மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இக்கொலையில் ஈடுபட்டது, ஓமலூர் கட்டிக்காரனூரை சேர்ந்த பிரபல ரவுடியான நரேஷ்குமார் (32) எனத்தெரியவந்தது. இவர், சேலம், கிருஷ்ணகிரி, விருதுநகர், திருப்பூர் என மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

கடந்த 10 நாட்களுக்கு முன் சங்ககிரி, மகுடஞ்சாவடியில் 2 மூதாட்டிகளை தாக்கி நகையை பறித்து சென்றிருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.

இதையடுத்து அவரை தீவிரமாக போலீசார் தேடியநிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சங்ககிரி மலைக்கோட்டை மலையடிவாரத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சென்று சுற்றி வளைத்தனர். அப்போது எஸ்ஐ விஜயராகவன், போலீஸ்காரர் செல்வகுமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட முயன்றவரை இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டார். அதில், கொள்ளையன் நரேஷ்குமாரின் வலது காலில் குண்டு பாய்ந்து, கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையன் நரேஷ்குமார் மீது 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தோட்டங்களிலும், வீடுகளிலும் தனியாக இருக்கும் மூதாட்டிகளை கொடூரமாக தாக்கி நகை, பணத்தை பறித்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். அதனால், மற்ற மாவட்டங்களில் இவர் மீதுள்ள வழக்குகளில், கைது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே நேற்று, கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி போலீசார் சேலம் வந்து, கொள்ளையன் நரேஷ்குமாரிடம் விசாரித்துள்ளனர்.

கடந்த 9ம் தேதி தமிழ்நாடு-கர்நாடகா மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் 60 வயது முதியவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த செல்போன், ரூ.20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு நரேஷ்குமார் தப்பி வந்துள்ளார் என்ற பகீர் தகவல் கிடைத்துள்ளது. அந்த கொலை மற்றும் கொள்ைள தொடர்பாக சேலம் மாவட்ட போலீசாரிடமும், கொள்ளையனிடமும் அத்திப்பள்ளி போலீஸ் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். இந்த வழக்கில், அவரை கைது செய்ய மேல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2 வழக்கில் கைது நடவடிக்கை

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொள்ளையன் நரேஷ்குமாரை நேற்று, சேலம் மாவட்ட போலீசார் 2 வழக்குகளில் பார்மல் அரஸ்ட் செய்தனர். மகுடஞ்சாவடியில் கடந்த 3ம் தேதி மூதாட்டி ராசம்மாளை தாக்கி அவரிடம் இருந்து மோதிரத்தை பறித்து சென்ற வழக்கில் கைது செய்துள்ளனர். அதேபோல், நேற்று முன்தினம் சங்ககிரி மலையடிவாரத்தில் போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது, எஸ்ஐ, போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் சங்ககிரி போலீசார் கைது செய்திருக்கின்றனர்.