சென்னை: மகள் ரிதன்யா தற்கொலை வழக்கில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவை சேர்க்க வேண்டும் என்று தந்தை டிஜிபியிடம் நேற்று புகார் அளித்துள்ளார். திருப்பூரில் திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை நேற்று தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பிறகு சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்தார்.
பிறகு ரிதன்யா தந்தை அண்ணாதுரை அளித்த பேட்டி: எனது மகள் இறப்பில் போலீசார் சாதாரண சட்டப்பிரிவு தான் போட்டுள்ளனர். அது குறித்து நான் எஸ்பி அலுவலகத்தில் கேட்ட போது, மகளின் ஆடியோ விசாரணை, உடல் கூறு ஆய்வு, செல்போன் ஆய்வுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ரிப்போர்ட் வரவில்லை என்றனர். நானும் அதற்காக காத்திருந்தேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கு இன்னும் தொய்வாக செல்கிறதே என்று டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன். எனது புகாரின் மீது டிஜிபி நேரடியாக எஸ்பியிடம் பேசினார்.
ஆடியோவில் எனது மகள் இறக்கும் தருவாயில் பேசியது உலகம் முழுவதும் எல்லோரும் கேட்டிருப்பீங்க. அதில் வந்து எனது மகள் உடலாலும், மனதாலும்.... சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது. அவ்வளவு கேவலமாக நடந்து இருக்காங்க எனது மகளிடம். அது ரொம்ப கொடுமையானது. அதற்காக தான் நான் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் சேர்க்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன். அவர்களுக்கு இருக்கிறதுலேயே உச்சப்பட்ச தண்டனையை வழங்க வேண்டும். பெண்களுக்கு ஒரு தைரியமான, ஆரோக்கியமான வாழ்வு அமைய வேண்டும் என இந்த நீதித்துறையும், தமிழக அரசும் கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது மகளுக்கு நீதி கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு கிடைக்க கூடிய தண்டனை மூலம் உலகத்தில் இனி எந்த பெண்ணுக்கும் இந்நிலை ஏற்பட கூடாது. இவ்வாறு ரிதன்யா தந்தை கூறினார்.
* தடயவியல் சோதனை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
ரிதன்யா வழக்கில் கைதான கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி, எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, அறிக்கை போதுமான தகவல்களுடன் முழுமையாக இல்லை. ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே, ரிதன்யாவின் ஆடியோ பதிவு என்ன ஆனது, அந்த ஆடியோ அவரது போனில் தான் ரெக்கார்டு செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பி, தடயவியல் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வரும் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.