திருப்பூர்: ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனுவை திருப்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமின் வழங்க ஆட்சேபனை தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரை என்பவரது மகள் ரிதன்யாவுக்கும் (24),கைகாட்டி புதூர் ஜெயம் கார்டன் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சித்ரா தேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27)என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 28ம் தேதி ரிதன்யா காரில் இருந்தபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேவூர் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்தனர். இதற்கிடையே ஜாமீன் கேட்டு திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் தரப்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கவின்குமார், ஈஸ்வர மூர்த்தியின் ஜாமீன் மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சித்ரா தேவியின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் சித்ரா தேவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


