Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு முதல் 100 இடங்களில் 10 தமிழக மாணவர்கள்: 17 பேர் மட்டுமே முதல் இடம்

சென்னை: திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இவற்றில் முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். முன்னதாக, 67 பேர் முதலிடம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 17 பேர் மட்டுமே 720க்கு 720 பெற்றுள்ளனர். தேசிய அளவில் கடந்த மே 5ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் உத்தரவின்படி, நீட் தேர்வில் குறிப்பிட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி தேசிய அளவில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்தனர். வினாத்தாள் கசிவு மற்றும் முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, 1,563 பேருக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. அதில் 813 மாணவர்கள் மறுதேர்வு ஜூன் 23ம் தேதி எழுதினர். அவர்களுக்கான புதிய மதிப்பெண்கள் மற்றும் தேர்வை எழுத மறுத்த மாணவர்களில் கருணை மதிப்பெண்கள் நீக்கப்பட்ட புதிய மதிப்பெண்கள் ஜூன் 30ம் தேதி வெளியானது.

ஜூலை 8ம் தேதி முதல் ஜூலை 23ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வழக்குகளின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உண்மை என்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அதனால் பயனடைந்தவர்களை கண்டறிவது அவசியமாக உள்ளது என தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ அறிக்கையும், தேர்வில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வின் முடிவுகளை ஐஐடி மெட்ராஸ் நிபுணர் குழுவின் மூலம் செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் தரவுகள் படி, மீண்டும் ஒரு பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவினால் பயனடைந்தவர்கள் 155 பேர் வரைதான் இருப்பார்கள் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட தரவுகளின்படி, வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பெண் வழங்குவதில் பெரியளவில் பாதிப்பு இல்லை என தெரியவருகிறது. எனவே, மொத்த தேர்வை ரத்து செய்யவேண்டிய தேவை இல்லை என கண்டறியப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டிய தேவை இல்லை என உச்ச நீதிமன்றம் மறுதேர்விற்கு மறுப்பு தெரிவித்து தீர்ப்பை வழங்கியது. நீட் தேர்வு வினாத்தாளில் 19வது கேள்விக்கு இரண்டு பதில்கள் சரியானவை என தேசிய தேர்வு முகமை மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியது. முதலிடம் பிடித்த மாணவர்களில் 44 பேர் இந்த கேள்வியினால் முழு மதிப்பெண் பெற்றவர்கள். மத்திய அரசின் தகவலின்படி, பழைய NCERT விடையை (Option 2) 4,20,774 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். புதிய NCERT விடையை (Option 4) 9,28,379 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், 19வது கேள்விக்கு சரியான பதிலை கண்டறிய 3 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க டெல்லி ஐஐடி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 19வது கேள்விக்கு Option 4 சரியான பதில் என அறிக்கை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த கேள்விக்கு தவறான விடையளித்த மாணவர்களின் மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்து முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட உத்தரவிடப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 21ம் தேதி நகரம் மற்றும் தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

இந்நிலையில், திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை நேற்று https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு புதிய மதிப்பெண் வெளியிடப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முதல் 100 இடங்களில் 10 தமிழக மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். ஜூன் 4ம் தேதி நடந்த நீட் தேர்வை 13,15,853 பேர் எழுதியிருந்தனர். முன்னதாக வெளியிடப்பட் தேர்வு முடிவில் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியோர் 1.52 லட்சம் பேர்.

அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 89,426 ஆக இருந்தது. தற்போது திருத்தப்பட்ட தேர்வு முடிவின்படி 89,198 ஆக தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. முன்னதாக, 67 பேர் முதலிடம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 17 பேர் மட்டுமே 720க்கு 720 பெற்றுள்ளனர். முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் பெற்றுள்ள வரிசை எண் விபரம் 12, 26, 38, 41, 42, 51, 66, 72, 74, 100 12-வது இடத்தை பெற்றுள்ள தமிழக மாணவர் ரஜினீஷ் 720 மதிப்பெண்ணும் 26 வது இடத்தை பிடித்த, சையத் ஆரிபின் யூசுப் 715 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.