Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இஸ்லாமிய சமுதாய மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த நிர்வாகிகள்

சென்னை: இஸ்லாமிய சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இன்று முகாம் அலுவலகத்தில், தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு தலைவர் முஹம்மது பஷீர், செயலாளர் முஹம்மது பெய்க், பொருளாளர் லியாகத் அலி, துணை செயலாளர் ஆரிப் சுல்தான் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் காசிம் முஸ்தபா, முஹம்மது பாரூக், ஹனீபா ஆகியோர் சந்தித்து, இஸ்லாமிய சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஜன.9ம் தேதி அன்று கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனும்,பிப். 17ல் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களது கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. அக்கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அவற்றை நிறைவேற்ற ஆணைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சிறுபான்மையின மக்களின் வழிபாட்டுத் தலங்களான கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள், இஸ்லாமியர்களின் மசூதிகள் ஆகியவற்றை புதிதாக கட்டுவதற்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பதற்கும் அரசு அனுமதி வழங்குவதில் இருந்து வந்த நடைமுறை சிக்கல்களை நீக்கி, எளிமையாக்கி இதற்கான ஆணைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமையிலான அரசால் வெளியிடப்பட்டதற்கு இச்சமுதாய மக்கள் தங்களது நன்றியினை தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்வின்போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் உடனிருந்தார்.