Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆழியார் அணை அருகே அமைக்கப்பட்ட நினைவு தூணை பராமரிக்க கோரிக்கை

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பிஏபி திட்டத்திற்குட்பட்ட பரம்பிக்குளம், சோலையார், ஆழியார், திருமூர்த்தி அணைகள் உள்ளடங்கியுள்ளது. இதில், முக்கிய அணைகளில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஆழியார் அணை கட்டும் பணி, 1956ம் ஆண்டு துவங்கப்பட்டு 1962ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து பிஏபி திட்ட அணைகளுக்கு வரும் தண்ணீர் ஒருங்கே அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆழியார் அணையருகே நவமலை மற்றும் சர்க்கார்பதி நீர்மின் உற்பத்தி நிலையம் உள்ளது. அதுபோல், வால்பாறை செல்லும் வழியில் காடாம்பாறையிலும் அமைந்துள்ளது.

இத்தகையை சிறப்பு மிக்க நீர்மின் நிலையங்களில் அழியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்போது, மெயின் மதகு பகுதியில் அமைக்கப்பட்ட நீர்மின் நிலையம் செயல்படுகிறது. இந்த நீர்மின் நிலைய பணி அனைத்தும் நிறைவடைந்து, 1963ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் துவக்க விழாவில் அப்போதைய முதல்வர் மறைந்த காமராஜர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இதையடுத்து, அதன் அருகேயே நீர்மின் நிலையங்களுக்கான நினைவு தூண் ஒன்று அமைக்கப்பட்டது. சுமார் 30 அடி உயரத்துக்கு அதன் உச்சியில் தமிழ்நாடு அரசு சின்னத்துடன் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. ஆழியார் அணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும், இந்த நினைவு தூணை பார்த்து ரசிப்பதுடன், எதனால் அமைக்கப்பட்டது என தெரிந்து கொண்டு செல்கின்றனர்.

ஆனால், இந்த நினைவு தூண் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடப்பில் உள்ளது. மரக்கிளைகள் மறைத்தபடி புதர்கிடையே மறைவான இடத்தில் இருப்பதுபோல் அமைந்துள்ள நினைவு சின்னத்தை, இப்போது வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் பார்க்க முடியாமல் கடந்து செல்கின்றனர். பிஏபி திட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த நினைவு தூணை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பொதுப்பணித்துறையினர் அதனை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், நினைவு தூணை சுற்றிலும் முழுமையாக பராமரிப்பு பணியை விரைந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.