Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நல்லிணக்கத்தோடு திராவிட இயக்கத்தில் தொண்டாற்றிய ஆர்.எம்.வி. மறைவு வேதனை தருகிறது: கி.வீரமணி, பிரேமலதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..!!

சென்னை: எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆர்.எம்.வீரப்பன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பகல் அவர் காலமானார். அவருக்கு வயது 98. வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

அண்ணாமலை: மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பன் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு அண்ணாமலை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்: பழம் பெரும் தலைவர், திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான திரு ஆர். எம் வீரப்பன் அவர்களின் மறைவு தமிழக மக்கள் அனைவருக்கும் பேரிழப்பு. இரண்டு நாட்களுக்கு முன் அவர் சொந்த ஊரான வல்லத்திராக் கோட்டையில் பேசும்போது அவரை நினைவு கூர்ந்தேன். அவருடைய தமிழ்ப் பற்றும், சமுதாயப் பணிகளும், அவர் வகித்த பொறுப்புகளில் அவர் ஆற்றிய பங்களிப்பும் எங்களைப் பெருமைப்பட வைத்தன. அவருடைய மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: ஆர்.எம்.வீரப்பன் மறைவு செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன் என பிரேமலதாஇரங்கல் தெரிவித்துள்ளார்.

 டிடிவி தினகரன்: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தவரும், எம்.ஜி.ஆர் கழகத் தலைவருமான மூத்த அரசியல்வாதி திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. நாடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து உச்சம் தொட்ட திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களை இழந்துவாடும் எம்.ஜி.ஆர் கழகத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி: நல்லிணக்கத்தோடு திராவிட இயக்கத்தில் தொண்டாற்றிய ஆர்.எம்.வி. மறைவு வேதனை தருகிறது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.