Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு துரிதமாக வழங்க வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்

சென்னை: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து துறைத் தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ஆகியவற்றின் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் வரைவு மானியக் கோரிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கே.எம்.எஸ் 2023-24ம் கொள்முதல் பருவத்திற்கான நெல் மணிகளை தடங்களின்றி விவசாயிகளிடமிருந்து விரைவில் கொள்முதல் செய்து அதற்கான ஊக்கத்தொகையினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தி அரவை ஆலைகளுக்கு அனுப்பி தரமான அரிசி நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்புவதை அதிகாரிகள் உறுதி செய்திட வேண்டும். கிடங்குகளில் போதுமான அளவு பச்சை, புழுங்கல் அரிசி இருப்பு வைப்பதை உறுதிபடுத்த வேண்டும்.

நவீன அரிசி அரவை ஆலைகளில் அரைக்கப்படும் அரிசியில் கருப்பு மற்றும் பழுப்பு நீக்கம் செய்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் மூலம் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்டு வரும் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு இருப்பு அளவினை கேட்டறிந்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு துரிதமாக வழங்கிட வேண்டும். அரிசிக் கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அறிவுரைகளை அமைச்சர் வழங்கினார். இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் கோபால், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிர்வாக இயக்குநர் எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறைத் தலைவர் ஜோஷி நிர்மல் குமார் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.