1.77 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஜன.10க்குள் இலவச வேட்டி, சேலை வழங்கி முடிக்கப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி தகவல்
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் இயங்கி வரும் வேலூர் கூட்டுறவு சக்கரை ஆலையில் இந்த ஆண்டுக்கான கரும்பு அரவையை நேற்று தொடங்கி வைத்த பின்னர் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: வரும் தைப்பொங்கலுக்கு 1.77 கோடி வேட்டி மற்றும் 1.77 கோடி சேலைகளை வழங்க இருக்கிறோம்.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த ஆண்டு வரும் 31ம் தேதிக்குள் வேட்டி சேலைகள் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்படும். அங்கிருந்து நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயனாளிகளிடம் வழங்கப்படும். ஜனவரி 10ம் தேதிக்குள் இப்பணி நிறைவடையும். சேலைகள் மட்டும் 15 ரகங்களில் வழங்குகிறோம். மேலும் 5 ரகமான வேட்டிகளையும் வழங்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.