Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி: பரிதாபமாக வெளியேறியது ஆர்சிபி

அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று குவாலிஃபயர்-2ல் விளையாட தகுதி பெற்றது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். விராத் கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி இணைந்து பெங்களூரு இன்னிங்சை தொடங்கினர். டு பிளெஸ்ஸி 17 ரன் எடுத்து (14 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) போல்ட் வேகத்தில் வெளியேற, கோஹ்லி 33 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் மாற்று வீரர் பெரைரா வசம் பிடிபட்டார்.

ஆர்சிபி அணி 7.2 ஓவரில் 56 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், கிரீன் - ரஜத் பட்டிதார் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்து நம்பிக்கையளித்தது. கிரீன் (27 ரன்), மேக்ஸ்வெல் (0) இருவரும் அஷ்வின் சுழலில் அடுத்தடுத்து மூழ்க, பெங்களூரு 97/4 என மீண்டும் சரிவை சந்தித்தது. அதிரடி காட்டிய ரஜத் பட்டிதார் 34 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆவேஷ் கான் வேகத்தில் பராக் வசம் பிடிபட்டார். ஓரளவு தாக்குப்பிடித்த மகிபால் லோம்ரோர் - தினேஷ் கார்த்திக் இணை 6வது விக்கெட்டுக்கு 32 ரன் சேர்த்தது. கார்த்திக் 11 ரன், மகிபால் 32 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆவேஷ் கான் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். கர்ண் ஷர்மா 5 ரன் எடுத்து கடைசி பந்தில் அவுட்டாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. ஸ்வப்னில் சிங் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆவேஷ் கான் 3, அஷ்வின் 2, போல்ட், சந்தீப், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் காட்மோர் இணைந்து துரத்தலை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவரில் 46 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். காட்மோர் 20 ரன் எடுத்து பெர்குசன் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து ஜெய்ஸ்வால் - கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்த போராடியது. இந்த ஜோடி 35 ரன்(23 பந்து) குவித்தது.

இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஜெய்ஸ்வால் 45 ரன் (30 பந்து, 8 பவுண்டரி), பராக் 36 ரன்(26 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். போவல் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி பந்துவீச்சில் சிராஜ் 2 விக்கெட், பெர்குசன், கரண் சர்மா, கேமரன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ச்சியாக 6 வெற்றிகளைப் பதிவு செய்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்திருந்த ஆர்சிபி அணி, இந்த தோல்வியால் பரிதாபமாக வெளியேறியது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நாளை நடக்க உள்ள குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகின்றன.

* விராத் கோஹ்லி 8000

ஐபிஎல் தொடரில் 8000 ரன் (அதிகம் 113, சராசரி 38.83, சதம் 8, அரை சதம் 55) என்ற சாதனை மைல் கல்லை எட்டிய முதல் வீரர் என்ற பெருமை ஆர்சிபி அணியின் விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. இந்த தொடரில் இதுவரை 7000 ரன் கடந்த ஒரே வீரரும் கோஹ்லி தான். 2வது இடத்தில் உள்ள ஷிகர் தவான் 6769 ரன் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.