Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே சாலைகள், பாலப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை: சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய பயிற்சி வளாக கூட்ட அரங்கில் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் சீரமைப்பு செய்ய வேண்டும். மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்து தங்கு தடையின்றி மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் மழைநீரால் தேங்காதவாறு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘நம்ம சாலை செயலி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து தகவல்களை பெற்று சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் அனைத்து பொறியாளர்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து சாலைகளிலும், சாலையின் எல்லை குறிக்கும் பணி விரைவில் முடிக்கப்பட வேண்டும். சாலை ஓரங்களில் போக்குவரத்து இடையூராக உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும். நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து பணிகளுக்கும் தரக் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர்களை கொண்டு தரத்தினை உறுதி செய்த பின்னரே பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். ஒப்பந்தத்தில் ஒவ்வொரு நிலைக்கும் வரையறுக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், திட்ட இயக்குநர் எஸ்.ஏ.ராமன், சிறப்பு அலுவலர் (டெக்னிக்கல்) சந்திரசேகர், தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சத்தியப்பிரகாஷ், முதன்மை இயக்குநர் செல்வதுரை, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.