Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரவு பெய்த கனமழையால் அதிகாலை ஏலகிரி மலைப்பாதை வளைவுகளில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள்: நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்

ஏலகிரி: ஏலகிரி மலையில் நேற்று முன்தினம் இரவு ெபய்த கனமழையால் நேற்று அதிகாலை மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,700 மீட்டர் உயரத்தில் உள்ள ஏலகிரி மலையில் கோடை காலத்திலும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் ஏழைகளின் ஊட்டியாக விளங்கி வருகிறது. இதனால் ஏலகிரி மலைக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும், பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட இடங்களில் சுற்றிப்பார்த்துவிட்டும் செல்கின்றனர். மலைப்பாதையில் ஏறும்போது அழகிய 14 கொண்டை ஊசி வளைவுகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் ஏலகிரி மலையில் பருவமழை காரணமாக சமீபமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதேபோல், நேற்று முன்தினம் இரவும் ஏலகிரி மலையில் கனமழை பெய்தது. இதனால் நேற்று அதிகாலை ஏலகிரி மலைப்பாதையில் 3, 4, 5வது கொண்டை ஊசி வளைவுகளில் திடீரென ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் 9வது கொண்டை ஊசி வளைவில் திடீரென பாறைகள் உருண்டு சாலையில் விழுந்த நிலையில், அதற்கு கீழுள்ள கொண்டை ஊசி வளைவுகளில் மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் நேற்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் ராட்சத பாறைகளை அகற்றினர். அதன் பின்னர் வாகனங்கள் சீராக இயக்கப்பட்டன.