மழை பாதிப்பு.. அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம்; உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்: புதுச்சேரி அரசு நிவாரணம் அறிவிப்பு!!
புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் மகாபலிபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்த நிலையில், மரக்காணம் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது. புதுச்சேரி நகரமே வெள்ளக் காடாக மாறியது. இந்நிலையில், புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ரங்கசாமி கூறியதாவது;
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். குடிசை வீடுகளுக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மாடு உயிரிழப்புக்கு ரூ.40 ஆயிரம்; இளம் கன்றுக்குட்டிக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும். விவசாய நிலம் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
மேலும், மழை வெள்ளத்தில் சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.10,000 நிவாரணமாக வழங்கப்படும். மழை வெள்ள நிவாரண பாதிப்புக்காக ரூ.100 கோடி வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் அனுப்பியுள்ளார். வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை சரி செய்ய காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


