Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில் பாதையை பராமரிக்கும் இயந்திரம் ரூ.53 கோடியில் அமெரிக்கா நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம்

சென்னை: ரயில் பாதையை பராமரிக்கும் தானியங்கி அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட இயக்கத்திற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவின் ஹர்ஸ்கோ ரயில் எல்எல்சி நிறுவனத்திற்கு ரூ.53.02 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், குறைந்தபட்சம் 8 ஸ்டோன் (Stones) கொண்ட ரயில் பாதையை பராமரிக்கும் தானியங்கி அரைக்கும் இயந்திரத்தின் வடிவமைப்பு, பராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா நிறுவனமான ஹர்ஸ்கோ ரயில் எல்எல்சி நிறுவனத்திற்கு ரூ.53.02 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது.

இதற்கான ஏற்பு கடிதம் கடந்த ஜூலை மாதம் வழங்கப்பட்டுள்ளது. ரயில் பாதையை பராமரிக்கும் தானியங்கி அரைக்கும் இயந்திரம் என்பது தண்டவாளங்களை பராமரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு வாகனமாகும். இந்த இயந்திரத்தின் முதன்மை செயல்பாடு, மெட்ரோ ரயில்களின் இயக்கத்தின் போது ஏற்படும் மேற்பரப்பு குறைபாடுகளை நீக்கி, பாதையின் வடிவியல் தரம், ரயில் சக்கர தொடர்பு, ஓட்டத்தின் தரம் ஆகியவற்றை மேம்படுத்தவும், மெட்ரோ ரயில்களின் மிக உயர்ந்த இயக்கச் சுமைகளை குறைக்க, சத்தம் மற்றும் அதிர்வைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் ரயில் தண்டவாளங்களின் சேவை ஆயுள் 25 சதவீதம் நீட்டிக்கப்படுகிறது.

இயந்திரம் பணி தொடங்கிய நாளிலிருந்து 4 ஆண்டுகளுக்கு இயந்திரத்தின் விரிவான பராமரிப்பு மற்றும் செயல்பாடு ஆகியவற்றிற்காக இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், ஹர்ஸ்கோ ரயில் எல்எல்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த் சீனிவாசன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டன் எலியாசர், ரேகா பிரகாஷ், தலைமைப் பாதை நிபுணர் காளிமுத்து, பொது ஆலோசகர்கள் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.