Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடரும் ரயில் விபத்துகள் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்: அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: தொடரும் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. மேற்குவங்கத்தின் டார்ஜிலிங்கில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதிய விபத்தில் 10 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சரக்கு ரயில் லோகோ பைலட் சிக்னலை கவனிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் ட்விட்டர் பதிவில் மோடி அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, குற்றம்சாட்டி உள்ளார்.

1. ரயில் விபத்து ஏற்படும் போதெல்லாம் மோடி அரசின் ரயில்வே அமைச்சர் கேமராக்கள் பின்தொடர விபத்து இடத்துக்கு சென்று, அங்கு எல்லாம் சரியாகி விட்டதுபோல் பேசுகிறார். இந்த விபத்துக்கு யார் பொறுப்பு? நீங்களா?(மோடி) அமைச்சரா?

2. பாலசோர் போன்றதொரு பெரிய ரயில் விபத்துக்கு பிறகும் ஏன் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கூட கவாச் விபத்து தடுப்பு அமைப்பு சேர்க்கப்படவில்லை?

3. ரயில்வேயில் ஏன் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை ஏன் கடந்த 10 ஆண்டுகளில் நிரப்பப்படவில்லை?

4. என்சிஆர்பி(2022) அறிக்கையின்படி 2017 - 2021க்கு இடையே மட்டும் 1 லட்சம் பேர் ரயில் விபத்துகளில் பலியாகி உள்ளனர். இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?

5. ஆள் பற்றாக்குறையால் லோகோ பைலட்டுகள் நீண்ட நேரம் பணியாற்றுவதே விபத்துகளுக்கு காரணம் என ரயில்வே வாரியமே ஒப்புக் கொண்டுள்ளது. பிறகு ஏன் அந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை?

6. நாடாளுமன்ற நிலைக்குழு தனது 323வது அறிக்கையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின்(சிஆர்எஸ்) பரிந்துரைகளை ரயில்வே வாரியம் புறக்கணித்தது குறித்து ரயில்வே வாரியத்தை விமர்சித்துள்ளது. சிஆர்எஸ் 8 - 10 சதவீத விபத்துகளை மட்டுமே விசாரிப்பதாக கோடிட்டு காட்டியிருந்தது. சிஆர்எஸ் ஏன் பலப்படுத்தப்படவில்லை?

7. சிஏஜியின் அறிக்கைப்படி தேசிய ரயில் பாதுகாப்பு (ராஷ்ட்ரிய ரயில் சுரக்ஷா கோஷ்) திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.20,000 கோடி கிடைக்க வேண்டும். இதில் 75 சதவீதம் குறைக்கப்பட்டது ஏன்? இந்த பணத்தை ரயில்வே அதிகாரிகள் தேவையற்ற செலவுகளுக்கும், வசதிகளை பெருக்கி கொள்ளவும் ஏன் பயன்படுத்துகின்றனர்?

8. சாதாரண படுக்கை வசதி கொண்ட ரயில்களில் பயணம் செய்ய அதிக கட்டணம் ஏன்? படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது ஏன்?

9. மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் ரயில் பெட்டிகளில் காவல்துறையினரை பயன்படுத்துமாறு அமைச்சர் கூறினார். ஆனால் கடந்த ஆண்டு 2.7 கோடி பேர் இருக்கை பற்றாக்குறை காரணமாக தங்கள் பயணச்சீட்டுகளை ரத்து செய்தனர். இது ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா? ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் நேரடி விளைவுதான் இது.

10. மோடி அரசு கடந்த 2017 - 18 பொது நிதிநிலை அறிக்கையுடன், ரயில்வே நிதி நிலை அறிக்கையையும் சேர்த்தது. பொறுப்புக்கூறல்களை தவிர்க்கவே இது செய்யப்பட்டதா?” என கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார். தங்களை தாங்களே புகழ்ந்து பேசி கொள்வதால் மோடி அரசின் ரயில்வே அலட்சியத்தை ஈடுகட்ட முடியாது. இவை அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

* ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்

காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், “கடந்த காலங்களில் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர்கள் பதவி விலகியதை பார்த்திருக்கிறோம். ரயில்வே துறையை பாஜ அரசு அழித்து விட்டது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தினார்.