Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரெய்டு, கைது மிரட்டல், குதிரைபேரம் 25 சதவீத பாஜ வேட்பாளர்கள் கட்சி தாவிய பிரபலங்கள்: 435ல் 106 பேர் மாற்று கட்சி மாஜிக்கள்; அதிர்ச்சி தகவல் அம்பலம்

புதுடெல்லி: பாஜவின் 435 வேட்பாளர்களில் 25 சதவீதம் பேர் கட்சி தாவிய பிரபலங்கள் என்ற அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. ரெய்டு, கைது மிரட்டல், குதிரைபேரம் மூலம் கட்சியில் சேர்க்கப்பட்ட 106 பேருக்கு பாஜ தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது. கடந்த 2014ல் நடந்த பொதுத் தேர்தலில் ஒன்றிய ஆட்சியை பிடித்த பாஜ நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதை விட எதிர்க்கட்சிகளை அழிப்பதற்காக திட்டமிடலுக்கே முழு நேரத்தையும் செலவிட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குதிரைபேரம், ரெய்டு நடத்தி மிரட்டல் விடுத்து பலரையும் தங்கள் கட்சிக்கு ஆள் பிடித்து, ஆட்சியை கவிழ்த்ததை ராஜ தந்திரமாக பாஜவினர் கூறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டு காலத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தலைவர்கள் குறிப்பாக எம்.பி., எம்எல்ஏக்களை இந்த அதட்டல் உருட்டலால் தங்கள் கட்சியில் ஐக்கியமாக செய்தது பாஜ தலைமை. பாஜவின் இந்த செயலுக்கு ஐடி, அமலாக்கத்துறை, சிபிஐ உறுதுணையாக செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தநிலையில், தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில், எத்தனை பேர் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள்? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், கட்சியின் சார்பில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 435 வேட்பாளர்களில் சுமார் 25 சதவீதம் பேர் மாற்று கட்சியில் இருந்து பாஜவில் சேர்ந்தவர்கள் என்ற தகவல் அம்பலமாகியுள்ளது. கட்சித் தாவியவர்களுக்கு சீட் கொடுப்பது என்பது பல கட்சிகளிலும் நடைமுறையில் இருந்தாலும் கூட பாஜ வேட்பாளர்கள் 4ல் ஒருவர் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் என்பது அந்த கட்சியினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜகவின் 435 வேட்பாளர்கள் பட்டியலில் 106 பேர், கடந்த 10 ஆண்டுகளில் ஏதோ ஒரு கட்டத்தில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஆவார்கள். அவர்களில் 90 பேர் கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இத்தகைய வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆந்திராவில் தான் அதிகமாக உள்ளது. அங்கு வெவ்வேறு கட்சியில் இருந்து வந்த ஆறு முக்கிய பிரபலங்கள் பாஜ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மட்டுமின்றி, தற்போதைய கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகியும் அடங்குவர். தெலங்கானாவில், பாஜ வின் 17 வேட்பாளர்களில் கிட்டத்தட்ட 11 பேர் மாற்று கட்சி மாஜிக்கள். அரியானாவில் நிறுத்தப்பட்ட 10 வேட்பாளர்களில் 6 பேர் கடந்த 2014ம் ஆண்டுக்கு பின் பாஜகவில் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான நவீன் ஜிண்டால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பாஜவில் இணைந்தவர்.

பஞ்சாபில் நிறுத்தப்பட்ட 13 வேட்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காங்கிரசில் இருந்து விலகிய பின் பாஜகவில் சேர்ந்தவர்கள் . ஜார்கண்ட்டில் நிறுத்தப்பட்ட 13 பேரில் ஏழு பேர் ஜேஎம்எம், காங்கிரஸ், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகளில் இருந்து பாஜகவில் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள 74 வேட்பாளர்களில் 31 சதவீதம் பேர் அதாவது 23 பேர் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள். அதேபோல் ஒடிசாவில் 29%, தமிழ்நாட்டில் 26% வேட்பாளர்கள் பிறகட்சிகளில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்கள் ஆவர். மகாராஷ்டிராவில் நிறுத்தப்பட்ட 28 வேட்பாளர்களில் 8 பேர் வேறு கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்கள் ஆவர். மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கூட மாற்று கட்சியில் இருந்து வந்த 2 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

பாஜவில் இருந்து விலகி வேறு கட்சியில் சேர்ந்த பிறகு தாய் கட்சிக்கு திரும்பிய ஜெகதீஷ் ஷெட்டர்(கர்நாடகா), உதயன்ராஜே போன்சலே(மகாராஷ்டிரா), சாக்ஷி மகாராஜ்(உ.பி) உள்ளிட்ட 5 பேருக்கும் பாஜ தலைமையில் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது. கட்சி மாறிகளுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளதால் பாஜவில் நீண்ட காலம் இருந்து, கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் விரக்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தல் முடிவு வந்ததும் அவர்களில் பலர் பாஜவுக்கே முழுக்கு போடும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.