Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் தலையீடு விவகாரம்: டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி போலீசுக்கு ராகுல் கடிதம்

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையில் அமெரிக்காவின் தலையீடு விவகாரத்தை கண்டித்து, டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி போலீசுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்ததாகக் கூறிய விவகாரத்தில், பிரதமர் மோடி பதிலளிக்காததை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசை குறிவைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையில் அமெரிக்க அதிபரின் தலையீடுக்கு எதிராக டெல்லியில் விஜய் சவுக் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு, டெல்லி காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளார். ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இரு நாடுகளின் வர்த்தகத்தை நிறுத்துவதாக மிரட்டி, போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர் மோடியின் மவுனத்தை விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை ஒன்றிய அரசு ஏற்றதா? அல்லது வர்த்தகத்தில் சலுகைகள் ஏதேனும் வழங்கப்பட்டதா?’ என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் டிரம்பால் முதலில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் நடத்த கோரி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஒன்றிய அரசு, போர் நிறுத்தம் இரு நாடுகளுக்கு இடையே நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்பட்டதாகவும், வர்த்தகம் குறித்து எந்தப் பேச்சும் நடக்கவில்லை என்றும் மறுத்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சி, 1971ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையை மேற்கோள் காட்டி, இந்தியாவின் இறையாண்மையை வலியுறுத்தி, மோடி அரசு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை அனுமதித்ததா? என்று கேள்வி எழுப்பியது. தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத் திட்டம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவின் தலையீடு குறித்து எதிர்க்கட்சிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.