Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வந்தே மாதரம், தேர்தல் சீர்திருத்த விவாதம்; மோடி அரசு அழுத்தத்தில் உள்ளது: காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு

புதுடெல்லி: வந்தே மாதரம், தேர்தல் சீர்திருத்த விவாதம் நடத்தியதில் மோடி அரசு அழுத்தத்தில் உள்ளதாக காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் ராகுல்காந்தி இனிவரும் காலங்களில் அவை நடவடிக்கை குறித்தும், உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும் விவாதித்தார். மேலும் வந்தே மாதரம் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த இரு அவைகளிலும் நடந்த விவாதங்களின் போது காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்திறனை அவர் பாராட்டினார்.

அதோடு இந்த விவாதத்தில் ஒன்றிய அரசு அளித்த விளக்கத்தையும் எதிர்க்கட்சிகளால் துண்டு துண்டாக சிதைத்து விட்டதாக தெரிவித்தார். கூட்டத்திற்கு பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,’ வந்தே மாதரம் மற்றும் தேர்தல் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கடுமையான விவாதம் நடந்தது. இரண்டு விவாதங்களிலும், அவர்களின் கதையை நாங்கள் துண்டு துண்டாகியதை நான் நன்றாக உணர்ந்தேன். தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதம் நடந்த போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலக்கம் அடைந்தார். அதனால் அவர் நாடாளுமன்றத்தில் தவறான வார்த்தையை பயன்படுத்தினார். எனவே அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டு அழுத்தத்தில் இருந்தார்.

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. முழு அமைப்பும் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது, முழு நாடும் அதை அறிவார்கள்’ என்றார். மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய் கூறுகையில்,’ இண்டிகோ விமானப் போக்குவரத்து இடையூறுகள், காற்று மாசுபாடு மற்றும் தொழிலாளர் சட்டப் பிரச்சினை போன்ற மக்களின் தற்போதைய பிரச்சினைகளை எழுப்புவதில் அவையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் பற்றிய விவாதத்தின் போது,மாநிலங்களவையில் கார்கே மற்றும் மக்களவையில் பிரியங்கா ஆகியோர் உண்மையை மக்கள் முன் கொண்டு வந்து, பிரச்சினையை அரசியலாக்கும் நோக்கங்களை மழுங்கடித்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தேர்தல் சீர்திருத்த விவாதத்தில் ராகுல் காந்தி உள்துறை அமைச்சரை, ஆதாரங்களின் அடிப்படையில், பத்திரிகையாளர் சந்திப்புகளில் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து விவாதத்திற்கு சவால் விடுத்ததை அனைவரும் பார்த்தார்கள். உள்துறை அமைச்சர் அதிர்ச்சியடைந்தார். அதனால் அவர் சில நாடாளுமன்றத்திற்கு புறம்பான கருத்துக்களையும் தெரிவித்தார்’ என்றார்.

தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் சராசரியாக 50 நாள் வேலை

கடந்த ஐந்து ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு சராசரியாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் கமலேஷ் பாஸ்வான் நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தார். 2023-24 ஆம் ஆண்டில், ஒரு வீட்டிற்கு சராசரி வேலை நாட்கள் 52.07 ஆகவும், 2022-23 ஆம் ஆண்டில் 47.84 ஆகவும், 2021-22 ஆம் ஆண்டில் 50.07 ஆகவும், 2020-21 ஆம் ஆண்டில் 51.54 ஆகவும் இருந்தது. ஒட்டுமொத்தமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு வீட்டிற்கு சராசரியாக வேலை நாட்கள் 50.35 ஆக உள்ளது என்று தெரிவித்தார்.

திரிணாமுல் எம்பி மீது எழுத்துப்பூர்வ புகார்

நாடாளுமன்றத்தில் இ சிகரெட் புகைத்த பிரச்னையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீது பாஜ எம்.பி. அனுராக் தாக்கூர் நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எழுத்துப்பூர்வ புகார் அளித்தார். அதில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 5,945 இந்தியர்கள் வெளியேற்றம்

இந்தியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல், ஈரான், சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து 5,945 இந்தியர்களை ஒன்றிய அரசு பாதுகாப்பாக வெளியேற்றியதாக வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மக்களவையில் பதிலளித்தார்.

1068 ஹெக்டேர் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது

ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்திய ரயில்வே வசம் உள்ள மொத்த நிலம் சுமார் 4.99 லட்சம் ஹெக்டேர். அதில் 1068.54 ஹெக்டேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் 11,152 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

நாடு முழுவதும் உள்ள சுமார் 18 லட்சம் ஏக்கர் பாதுகாப்பு நிலங்களில், சுமார் 11,152 ஏக்கர் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டது என்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் தெரிவித்தார்.

ரயில் விபத்து ஆண்டு சராசரி 171ல் இருந்து 31ஆக குறைந்தது

பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதால், 2014-15 ஆம் ஆண்டில் 135 ஆக இருந்த ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 2025-26 ஆம் ஆண்டில் நவம்பர் வரை 11 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,’ 2014-15 ஆம் ஆண்டில் 135 ஆக இருந்த தொடர் ரயில் விபத்துகள் 2024-25 ஆம் ஆண்டில் 31 ஆகக் குறைந்துள்ளன. 2004-14 ஆம் ஆண்டில் தொடர் ரயில் விபத்துகள் 1711 (ஆண்டுக்கு சராசரியாக 171) ஆக இருந்தன, இது 2024-25 ஆம் ஆண்டில் 31 ஆகவும், 2025-26 ஆம் ஆண்டில் (நவம்பர், 2025 வரை) 11 ஆகவும் குறைந்துள்ளது’ என்றார்.