Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டேவிஸ் கோப்பை போட்டியுடன் ரபேல் நடால் ஓய்வு; பிரமிக்க வைக்கும் அற்புத ஆட்டக்காரர்: ஒரு ரசிகனாக ரோஜர் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்

மலாகா: ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் நடந்து வரும் டேவிஸ் கோப்பை பைனல்ஸ் டென்னிஸ் போட்டிகளுடன் ஓய்வு பெறும் டென்னிஸ் உலகின் ஜாம்பவான் வீரர் ரபேல் நடாலுக்கு, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற பிரபல வீரர் ரோஜர் பெடரர் இதயத்தை உருக்கும் வகையில் பிரியாவிடை கடிதம் எழுதி உள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் (38), இளம் வயதில் உலகின் நெம்பர் 1 வீரராகி பல்வேறு அரிய சாதனைகள் படைத்தவர். இவர், ஸ்பெயினில் நேற்று துவங்கிய டேவிஸ் கோப்பை பைனல்ஸ் போட்டிகளுக்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், ரபேல் நடாலுக்கு, கடந்த 2022ல் ஓய்வு பெற்ற, டென்னிஸ் உலகின் மற்றொரு ஜாம்பவான் வீரரும், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவருமான ரோஜர் பெடரர் (43), பிரியாவிடை கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: டென்னிஸ் அரங்கில் இருந்து நீங்கள் ஓய்வு பெறும் செய்தி அறிந்தேன். இவ்விஷயத்தில் உணர்ச்சி வசப்பட்டு மனதளவில் கலக்கமடையும் முன் ஒரு சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னை பல முறை நீங்கள் டென்னிஸ் போட்டிகளில் வீழ்த்தி இருக்கிறீர்கள். சிரமப்பட்டு உங்களை நான் வெல்லும் சந்தர்ப்பங்களை விட தோற்ற நிகழ்வுகள் அதிகம். டென்னிஸ் உலகில் வேறு யாராலும் அளிக்க முடியாத சவாலை உங்களிடம் இருந்துதான் நான் பெற்றேன்.

களிமண் தரையில் நடக்கும் போட்டிகளில் நீங்கள் உண்மையில் ஜாம்பவானே. உங்களை எதிர்த்து நிற்பதென்றால் நான் நினைத்து வந்ததை விட கடுமையாக உழைத்தால்தான் களத்தில் நிற்க முடியும். எனது விளையாட்டை மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்த்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதலை தந்தவர் நீங்கள். மூட நம்பிக்கைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், களத்தில் உங்கள் செயல்பாடுகள் வேறு லெவலில் இருந்தன. தலைமுடியை கோதி விடுவதாகட்டும். பொம்மை வீரர்களை போன்று தண்ணீர் பாட்டில்களை முறையாக அடுக்கி வைப்பதாகட்டும்; ஆடைகளை சரி செய்வதிலாகட்டும்; எல்லாவற்றையும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்வதை பார்த்து வியந்துள்ளேன். இவை அனைத்தையும் அளப்பரிய காதலுடன் நான் ரகசியமாக கண்டு களித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், நீங்கள் செய்யும் எல்லாமே அத்தனை நேர்த்தி. பிரமிக்க வைக்கும் உங்களின் அற்புத விளையாட்டு இன்னும் பேரழகு.

கடந்த 2004ல் ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிக்கு பின், முதல் முறையாக நெம்பர் 1 வீரராக நான் உருவெடுத்தேன். உலகின் உச்சத்தில் இருப்பதாக நான் எண்ணிக் கொண்டேன். 2 மாதங்களில், மியாமி நகரில் நடந்த போட்டியின்போது, கையில்லா சட்டை அணிந்து அட்டகாசமாக களத்தில் நுழைந்த நீங்கள் அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தி என்னை வீழ்த்தினீர்கள். உங்களை பற்றி பிறர் புகழ்ச்சியாக சொல்லக் கேட்டிருந்த நான், அவை அனைத்தும் உண்மை என்று அன்றுதான் உணர்ந்தேன். தற்போது, 20 ஆண்டுகள் கடந்து விட்டன. இத்தனை ஆண்டுகளில் நம்ப முடியாத வகையில் மகத்தான சாதனைகளை நீங்கள் நிகழ்த்தி உள்ளீர். அவற்றில், 14 பிரெஞ்ச் ஓபன் போட்டிகளில் பிரமிப்பான வெற்றி. ஸ்பெயின் நாட்டை நீங்கள் பெருமைப்பட செய்துள்ளீர். அதுமட்டுமல்ல. உங்களால், ஒட்டுமொத்த டென்னிஸ் உலகமும் பெருமை கொள்கிறது. இப்படிக்கு, என்றும் உங்கள் ரசிகன் ரோஜர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.