கோவை: கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் மாணவரும், நடிகருமான சிவக்குமார், அவரது மகன் நடிகர் கார்த்தி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. பள்ளியில் படித்து பல்வேறு துறைகளில் சாதித்த முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், நடிகர் கார்த்தி பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு இணையாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் உயர்தரமான கல்வி வழங்கப்படுகிறது. சமீப காலங்களில் வெளியான கருத்துக் கணிப்புகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே சிறந்து விளங்குகிறார்கள்’’ என்றார். தொடர்ந்து தனது தந்தையின் சகோதரி இளமை காலத்தில் பள்ளிக்குச் செல்லவும், கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்பட்ட சூழலை கண்ணீர் மல்க தெரிவித்து, பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்தார்.
தொடர்ந்து நடிகர் சிவக்குமார் பேசுகையில், ‘‘சிறு வயதில் ஆசிரியர்களைப் பார்த்து அவர்களை போல ஆக வேண்டும் என்று படித்தேன். ஓவிய ஆசிரியராக வேண்டும் என்று ஓவியம் பயின்றேன். கலைஞர் கருணாநிதி வசனங்களைக் கேட்டு திரையுலகில் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அவர் வசனத்தையே பேசி நடித்தேன்’’ என்றார்.