சென்னை: புழல் பெண்கள் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். சென்னை புழல் மத்திய பெண்கள் சிறையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த, சிறையில் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத நுழைவு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான வெளிநாட்டு பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புழல் மகளிர் சிறையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த நவாபோர் ஒன்யின் மோனிகா என்ற பெண், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ப்ரெட்லைன் பெடிமேர் ஏப்ரல் என்பவரை, தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதில் காயம் ஏற்பட்டது. இதனைகண்ட சிறை பெண் காவலர்கள், இரு தரப்பினரையும் சமரசம் செய்து காயமடைந்த தென் ஆப்ரிக்கா பெண் கைதிக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து, சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், புழல் போலீசார் நைஜீரிய பெண் கைதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.