புதுச்சேரி: புஸ்ஸி ஆனந்தை மிரட்டிய எஸ்பிக்கு பாஜ அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். கரூர் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பிறகு, முதல்முறையாக கடந்த 9ம் தேதி புதுச்சேரியில் திறந்தவெளி மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார். கியுஆர்கோடு பாஸ் கொடுக்கப்பட்ட 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று காவல்துறை நிபந்தனை விதித்திருந்தது. அதன்படி பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுச்சேரி சீனியர் எஸ்பி ஈஷாசிங், அரங்கின் நுழைவாயிலிலேயே நின்று பாஸ் இருக்கிறவர்களை மட்டுமே அனுமதித்தார்.
ஆனால், மைதானத்துக்கு விஜய் வந்தும் கூட்டம் வராததால், நுழைவாயிலுக்கு சென்ற தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், போலீசார் வைத்திருந்த மைக்கை வாங்கி, ‘வெளியே இருக்கிறவர்கள் அனைவரும் உள்ளே வரணும்’ என்று கூறினார். இதை பார்த்த சீனியர் எஸ்பி ஈஷா சிங், அவரிடம் இருந்து மைக்கை ஆவேசமாக பறித்தார். இதனால், ஷாக்கான புஸ்ஸி ஆனந்த் ஏதோ கேள்வி எழுப்ப முயன்றார். உடனே அவரிடம் ‘உங்கள் வேலையை நீங்க பாருங்க... எங்க வேலையை நாங்கள் பார்க்கிறோம்’ என்று கூறினார்.
பின்னர், ஒவ்வொரு நுழைவாயிலுக்கும் சென்ற புஸ்ஸி ஆனந்த் அங்கு பாஸ் இல்லாமல் நின்றிருந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்து உள்ளே அனுப்பி வைத்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த சீனியர் எஸ்பி ஈஷா சிங், பாஸ் இல்லாதவர்களை பிடித்து வெளியே அனுப்பினார். எதிர்ப்பு தெரிவித்த புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளிடம், ‘உங்களால்தான் கரூரில் 40 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். யாரேனும் உயிரிழந்தால் நாங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம்.
இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் தான் பொறுப்பு. பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டும் உள்ளே வர வேண்டும்’ என கடுமையாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், டிஜிபி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜவை சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஈஷா சிங்கை வெகுவாக பாராட்டி பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கினார். சீனியர் எஸ்பி ஈஷாசிங், தந்தையும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிதான். ஈஷா சிங் வழக்கறிஞராக பணியாற்றிய பின்னர் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.


