சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. புஸ்ஸி ஆனந்த் தரப்பில் 2வது முறையாக முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கரூர் நகர காவல் ஆய்வாளரை எதிர்மனுதாரராக குறிப்பிட்டு தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், முன்ஜாமீன் மனு வாபஸ் பெற்றதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
