Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புல்வாமா தாக்குதல் முதல் தீவிரவாதத்திற்கு நிதியுதவி வரை தீவிரவாதிகளின் புதிய ஆயுதமாகும் ஆன்லைன் தளங்கள்: சர்வதேச அமைப்பான ‘எப்ஏடிஎப்’ அதிர்ச்சி அறிக்கை

வாஷிங்டன்: புல்வாமா தாக்குதல் முதல் தீவிரவாதத்திற்கு நிதியுதவி வரை தீவிரவாதிகளின் புதிய ஆயுதமாக ஆன்லைன் தளங்கள் இருப்பதாக சர்வதேச அமைப்பான ‘எப்ஏடிஎப்’ அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவை உலுக்கிய தீவிரவாதத் தாக்குதல்களில், ஆன்லைன் தளங்கள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் முக்கிய பங்காற்றியிருப்பது ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, 2019ம் ஆண்டில் 40 சிஆர்பிஎஃப் வீரர்களின் உயிரைப் பறித்த புல்வாமா தாக்குதலில், வெடிகுண்டின் திறனை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்ட அலுமினிய பவுடர் உள்ளிட்ட பொருட்கள், ‘அமேசான்’ போன்ற முன்னணி ஆன்லைன் வணிக தளம் மூலமாக வாங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை மையமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய இந்தத் தாக்குதலின் ஏற்பாடுகளுக்கும், தளவாடங்களுக்கும் ஆன்லைன் வணிக தளங்கள் பயன்படுத்தப்பட்டதை புலனாய்வுத்துறையினர் கண்டறிந்தனர்.

இதேபோல் 2022ம் ஆண்டில் கோரக்நாத் கோயில் மீது ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் நடத்திய தாக்குதலில், குற்றவாளி ‘பேபால்’ சேவையைப் பயன்படுத்தி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு ஆதரவாக சுமார் ரூ.6.7 லட்சத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார். தனது இருப்பிடத்தை மறைக்க ‘விபிஎன்’ சேவைகளைப் பயன்படுத்திய அந்த குற்றவாளி, 44 சர்வதேச பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே பணமோசடி மற்றும் தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கப்படுவதைக் கண்காணிக்கும் சர்வதேச அமைப்பான நிதி நடவடிக்கை குழு (எப்ஏடிஎப்), தனது சமீபத்திய உலகளாவிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘தீவிரவாத அமைப்புகள், தங்களுக்கான நிதியை திரட்டுவதற்கும், நிதியைப் பரிமாற்றம் செய்வதற்கும், அதனை நிர்வகிப்பதற்கும் ஆன்லைன் வணிக தளங்கள், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சேவைகள் மற்றும் நிதி தொழில்நுட்பங்களை மிகவும் நுட்பமான வழிகளில் தவறாகப் பயன்படுத்துகின்றன.

ஆன்லைனில் சிறு பொருட்களை விற்பது, 3டி - பிரிண்டட் பாகங்கள் போன்ற வெடிமருந்துப் பொருட்களை வாங்குவது, சமூக ஊடகங்கள் வழியாக நன்கொடைகள் கோருவது ஆகியவற்றின் மூலம், தீவிரவாதக் குழுக்கள் செயல்படுகின்றன. பரவலாக்கப்பட்ட நிதி வலைப்பின்னல்களை உருவாக்கி சதி வேலைகளை அவர்கள் செய்து வருகின்றனர். போலியான பெயர்கள் மற்றும் போலி வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் தனிநபருக்கு, மற்றொரு தனிநபர் பணப்பரிமாற்ற முறைகள் பின்பற்றப்படுகின்றன. சில நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களை தூண்டிவிடும் பாகிஸ்தானை மீண்டும் ‘சாம்பல்’ பட்டியலில் சேர்க்க இந்தியா வலியுறுத்தி வருகிறது.

சமீபத்தில் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்த எப்ஏடிஎப், விரிவான நிதி ஆதரவும், அதிநவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பும் இல்லாமல் தீவிரவாத செயல்கள் சாத்தியமில்லை என்று கூறியுள்ளது. மேலும், உறுப்பு நாடுகள் ஆன்லைன் வணிக தளங்கள், விபிஎன் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் நிதிச் சேவைகள் மீதான மேற்பார்வையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.