Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ.1,433 கோடி மதிப்பில் ‘புதுச்சேரி ஷோர் ’ திட்டம்: ரூ.175 கோடியில் கப்பல் சேவை; ரூ.120 கோடியில் மீனவ கிராமங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், சதுப்புநில புத்துயிர் மற்றும் மணல் திட்டு மறுசீரமைப்பு மூலம் கடற்கரையின் நீண்ட கால நீடித்த பாதுகாப்பையும், காலநிலையை தாங்கும் தன்மையை உருவாக்கவும் ‘புதுச்சேரி ஷோர்’ என்ற பெயரில் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கடந்த வாரம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இந்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்தார். அதன்படி கடலோர மீனவ கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள், காரைக்காலில் தற்போதுள்ள மீன்பிடி துறைமுகத்தை தரம் உயர்த்துதல், புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கப்பல் சேவையை துவங்குதல், பழைய துறைமுகத்தில் பயணிகளுக்கு அனைத்து வசதிகளுடன் சுற்றுச்சூழல் கப்பல் முனையத்தை அமைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

ஒரு நிலையான நீலப் பொருளாதாரத்துக்கும், ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மை திட்டமிடலுக்கான திறன் நிறுவனங்களை உருவாக்கவும், ஒரு அதிநவீன சுற்றுச்சூழல் ஆய்வகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து மீனவ கிராமங்களிலும் உள்ள மீன்பிடி உள்கட்டமைப்புகளுக்கான நவீனமயமாக்குதல், குளங்களில் உள்ள உள்ளூர் சமூகங்களுக்கு சூழல் சுற்றுலா மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இது பருவமழை நீரோட்டத்தைப் பயன்படுத்தி கடலோர மண்டலங்களில் உள்ள ஆழமற்ற நீர்நிலைகளை ரீ-சார்ஜ் செய்ய முயற்சிக்கும்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மேற்கண்ட திட்டத்துக்கு ரூ.1,433 கோடியில் செயல்படுத்தும், இதில் ரூ.580 கோடி கழிவுநீரை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள், ரூ.175 கோடியில் கப்பல் சேவை முனையம், அனைத்து மீனவ கிராமங்களிலும் ரூ.120 கோடியில் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல் உள்ளிட்டவைகளை அடுத்த 5 ஆண்டுகளில் கொண்டுவர அரசு ஆலோசித்துள்ளது. இத்திட்டங்களுக்கு 70 சதவீதம் உலக வங்கி நிதியளிக்கிறது. மீதமுள்ள 30 சதவீதத்தை புதுச்சேரி அரசு வழங்குகிறது.