Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் அதிருப்தியாளர்களை சரிக்கட்ட மேலிடம் தீவிரம் அமைச்சராக பதவியேற்க பாஜ எம்எல்ஏ மறுப்பு: முதல்வர் ரங்கசாமி சமாதான முயற்சி, கவர்னருடன் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பாஜவில் அதிருப்தி கோஷ்டியினரை சரிக்கட்ட மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் அமைச்சராக ஜான்குமார் மறுப்பு தெரிவித்து வருவதால் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் முதல்வர் ரங்கசாமி ஈடுபட்டுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு தேசிய, மாநில அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி விட்டன. ஆனால் புதுச்சேரியில் வரும் தேர்தலில் தன்னிச்சையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசை பாஜவுக்கு உள்ளது.

இதற்கு முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரசை பகடைக்காயாக பயன்படுத்தி கழற்றிவிடும் திட்டத்தில் அக்கட்சி இருப்பதாகவும், இதனை அறிந்த ரங்கசாமி கூட்டணி குறித்து வழக்கம்போல் மவுனம் காத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிளவுபட்டு கிடக்கும் கட்சியைப் பலப்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு பாஜ தேசிய தலைமை தள்ளப்பட்டது. இந்நிலை நீடித்தால், நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை விட மோசமான நிலை ஏற்படும் என்று உணர்ந்த தலைமை அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

இதற்காக மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா புதுவை வந்துள்ளார். முதலில் அதிருப்தியாளர்களை சரிக்கட்டும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். அதிருப்தி கோஷ்டிக்கு தலைமை தாங்கும் ஜான்குமாரின் பல ஆண்டு கோரிக்கை அமைச்சர் பதவி வேண்டும் என்பது தான். இவருக்கு அமைச்சர் பதவி வழங்கி சரிகட்ட, சாய் சரவணன்குமாரின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர்.

தற்போது புதிய அமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படும் ஜான்குமார், சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் புதுச்சேரியில் கிறிஸ்தவர்களின் ஓட்டுவங்கி கணிசமாக கிடைக்கும் என்ற கணக்கும் போடப்பட்டுள்ளது. மேலும், லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் சார்லஸ் தரப்பு கோஷ்டியைச் சேர்ந்த அனைவரையும் சமாதானப்படுத்த முடியும் என பாஜ தேசிய தலைமை கருதுகிறது.

அதேபோல் பல ஆண்டு கட்சியில் இருந்து பொறுப்புகளை வகித்த முதலியார்பேட்டை செல்வம், காரைக்கால் தொழிலதிபர் ஜிஎன்எஸ் ராஜசேகரன் மற்றும் பாஜவை நம்பி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளிவந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தீப்பாய்ந்தானுக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பாஜ மாநில தலைவராக இருந்த செல்வகணபதி பதவிக்காலம் முடிந்தும் தொடர்ந்து வருகிறார். இதனால் புதிய பாஜ தலைவராக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருக்கும் சாய் சரவணன்குமார் அல்லது வி.பி ராமலிங்கம் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகின்றன.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் கட்சியிலும், அதிகாரத்திலும் நீடித்த அதிருப்திகளை சமாளிக்க முடியும் என பாஜ தலைமை பல்வேறு அதிரடி மாற்றங்களை அடுத்தடுத்து முன்னெடுக்க உள்ளதாக தகவல் பரவுகின்றன. இதனிடையே புதிய அமைச்சராக உள்ளதாக கூறப்படும் ஜான்குமார், தனக்கு ஆதி திராவிடர் நலத்துறை வேண்டாம் என மறுத்து வருவதாக தெரிகிறது.

இதுதொடர்பாக பாஜ மாநில தலைவர் செல்வகணபதி மற்றும் சட்டமன்ற கட்சித்தலைவரும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் இருவரும் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினர். இதில் சாய்.ஜெ. சரவணன்குமார் வைத்திருந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு பதிலாக வேறு துறைகளை ஒதுக்கும்படி முதல்வரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகின்றன. ஆனால் இதை ஏற்க மறுத்த ரங்கசாமியோ, இன்னும் 8 மாதம்தான் உள்ளது.

இதுபோன்ற சூழலில் இலாகாவை மாற்றியமைப்பது எங்களது கட்சிக்குள்ளும் சில பிரச்னைகளை எழுப்பும் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்குவது குறித்து இழுபறி நீடித்து வருகிறது. அதேநேரத்தில் முதல்வர் ரங்கசாமியும், ஆதிதிராவிடர் நலத்துறையை தங்கள் வசம் எடுத்துக் கொண்டால், அமைச்சரவையில் இல்லாத மற்றொரு ஆதிதிராவிடருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டிய சூழல் ஏற்படும். இதற்காக என்ஆர் காங்கிரஸ் தற்போதைய அமைச்சர்களையும் மாற்றம் செய்ய வேண்டிய நிலை உருவாகும் என்பதால் ரங்கசாமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில், நேற்று மாலை முதல்வர் ரங்கசாமி திடீரென ராஜ்நிவாஸ் சென்றார். அங்கு கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து, காலியாக உள்ள அமைச்சர் பதவியை நிரப்புவதற்கான பரிந்துரை கடிதத்தை அளித்தார். பின்னர் சிறிதுநேரம் இருவரும் பேசினர். புதிய அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்கள், ஒரு வாரிய தலைவர் ஆகியோர் நியமனம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

* அமைச்சர்கள் இலாகா மாற்றமா?

கவர்னருடன் சுமார் 25 நிமிட சந்திப்பிக்குப்பின் வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘துணைநிலை ஆளுநரிடம் புதிய அமைச்சரை பரிந்துரை செய்து கடிதம் கொடுத்து இருக்கிறேன். புதிய அமைச்சர் பதவியேற்பு தேதி குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். பாஜவை சேர்ந்தவரே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், மீண்டும் பாஜ சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கே அமைச்சர் பதவி வழங்கப்படும்.

யார் என்பதை (ஜான்குமார்) நீங்களே செய்தியில் போட்டு வீட்டீர்களே என்றார். பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார் வகித்த இலாகாவே, புதிய அமைச்சருக்கு ஒதுக்கப்படுமா? என கேட்டதற்கு, பதில் அளிக்காமல் முதல்வர் அங்கிருந்து சென்று விட்டார். இதனிடையே புதிய அமைச்சர் மற்றும் 3 புதிய நியமன எம்எல்ஏக்கள் வருகிற 2ம்தேதி பதவியேற்க உள்ளதாக அரசு வட்டாரத்தில் தகவல் பரவுகின்றன. அதற்கு முன்பாக ஒன்றிய அரசிடமிருந்து 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு கடிதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பட்டியலின வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை

புதுச்சேரி தேஜ கூட்டணி அமைச்சரவையில், ஆதிதிராவிடர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே தேஜ கூட்டணி அரசில் என்ஆர் காங்கிரசில் ஆதிதிராவிடரான சந்திர பிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து, முதல்வர் ரங்கசாமி அதிரடியாக நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக திருமுருகன் என்பவரை அமைச்சராக நியமித்தார். தற்போது ஒரே பட்டியலின வகுப்பை சேர்ந்த சாய்.ஜெ.சரவணன்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம், அமைச்சரவையில் பட்டியலின வகுப்புக்கு உரிய பிரிதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.