புதுச்சேரி: தனியார் மய எதிர்ப்பு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் புதுச்சேரியில் நேற்று பந்த் போராட்டம் நடந்தது. இதனால் அரசு பள்ளி, கல்லூரிகளை தவிர பெரும்பாலான தனியார் பள்ளி, கல்லூரிகள், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. காரைக்காலில் மாங்கனி திருவிழா, பாகூரில் தேர் திருவிழா நடைபெறுவதால் அங்கு பந்த் போராட்டத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அனைத்து அரசு ஊழியர்களும் நேற்று பணிக்கு வந்திருந்தனர். இந்தியா கூட்டணியினர் அண்ணாசிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மறைமலை அடிகள் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்பட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


