Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரி சுப்பையா சாலையில் பரபரப்பு நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக அகற்றம்

புதுச்சேரி : புதுச்சேரி சுப்பையா சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். வியாபாரிகள் தடுத்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்பல கோடி செலவில் சாலைகள் புதிதாக போடப்பட்டன. நடைபாதை வழிகள் அழகுப்படுத்தி புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதனிடையே சாலையோர நடைபாதையை பலரும் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். சுப்பையா சாலையில் கடற்கரை சாலை-பழைய துறைமுகம் சந்திப்பில் இருந்து சோனாம்பாளையம் சந்திப்பு வரையிலும் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து 100க்கும் மேற்பட்ட கடைகள் வைத்துள்ளனர். இதனால் கடற்கரை செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு) அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக கடை வியாபாரிகளுக்கு 2 நாள் அவகாசமும் தரப்பட்டது. இதனால் சிலர், தாங்களாகவே முன்வந்து கடைகளை அகற்றிக் கொண்டனர். இந்நிலையில் கால அவகாசம் முடிந்த நிலையில், பொதுப்பணித்துறையினர் நகராட்சி, வருவாய்த்துறை, காவல் துறையுடன் இணைந்து சுப்பையா சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியை நேற்று துவங்கினர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரராஜன், உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர் சிவபிரகாசம், வருவாய்த்துறை சார்பில் தாசில்தார் பிரித்வி, காவல்துறை சார்பில் கிழக்கு எஸ்.பி. லட்சுமி சவுஜன்யா ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நேற்று காலை துவங்கியது. இதற்காக பொக்லைன் இயந்திரம் தயாராக கொண்டு வரப்பட்டது.

பாதுகாப்பு பணிக்காக ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். நடைபாதையில் உள்ள தள்ளுவண்டி, சமையல் பொருட்கள், அலங்கார பூந்தொட்டிகள், விளம்பர போர்டுகள், இரும்பு படிக்கட்டுகள் ஆகியவற்றை அகற்றி வாகனத்தில் ஏற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். `இந்த கடைகளை நம்பித்தான் எங்களின் வாழ்வாதாரமே’ உள்ளது. இதனை அகற்றினால் நாங்கள் மிகவும் பாதிக்கப்படுவோம்.

அதையும் மீறி கடைகளை காலி செய்தால் தற்கொலை செய்து கொள்வோம்’ என கதறினர். அதற்கு அதிகாரிகள், கலெக்டர் உத்தரவின் பேரில் தான் இப்பணியை நாங்கள் செய்கிறோம். நீங்கள் தற்காலிகமாக கடைகளை வைத்துக் கொள்ளலாம். நிரந்தரமாக ஷெட் போட்டு, தள்ளுவண்டியை இரவு முழுவதும் நிறுத்தி வைக்கக்கூடாது என கூறினர். அதன்பேரில் வியாபாரிகள் கலைந்து சென்றனர். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மதியம் 12 மணி வரை நடந்தது.

ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரராஜன் கூறுகையில், ஏற்கனவே மிஷன் வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினோம். அதற்கடுத்து, சுப்பையா சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்து, வியாபாரிகளுக்கு கடைகளை காலி செய்ய 2 நாள் அவகாசம் கொடுத்தோம்.

ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை. அதனை தொடர்ந்து, கலெக்டரின் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றினோம். இதேபோல் நகரம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும். இரவு முழுவதும் கடைகளை, ஷெட்களை நிரந்தரமாக வைக்காமல் தற்காலிகமாக கடைகளை வைத்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளோம் என்றார்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் சுப்பையா சாலையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.