Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி; காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள் மீது ஏறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் விஜய் கடும் எச்சரிக்கை

சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளை (09.12.2025, செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தவெக தலைவர் விஜய்யின் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விஜய் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. விஜய், நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.