Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரகசிய டைரி, ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் சிக்கின புதுச்சேரி போலி மருந்து முறைகேட்டை விசாரிக்க 10 ேபர் கொண்ட சிறப்பு குழு: கவர்னர் அதிரடி

புதுச்சேரி: பிரபல மருந்து நிறுவனம் பெயரில் புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக கடந்த மாதம் புதுச்சேரி சிபிசிஐடி போலீசாருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குபதிவு செய்து, போலி மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்து வந்த ரானா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தார்.

இதில், புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசித்து வந்த மதுரையை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் என்பவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை, குருமாமபேட், திருபுவனை உள்ளிட்ட இடங்களில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், செட்டி தெருவில் உள்ள மொத்த விற்பனை அலுவலகம் மற்றும் தவளக்குப்பம், இடையார்பாளையத்தில் வீடு வாடகை எடுத்து குடோன் மூலம் பயன்படுத்தி சப்ளை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து, மேற்கூறிய இடங்களில் சில நாட்களுக்கு முன் சிபிசிஐடி போலீசார், மருந்து தர கட்டுப்பாடு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பல கோடி மதிப்பலான போலி மருந்துகளும், அதனை தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்து குடோன்களுக்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில், சிபிசிஐடி எஸ்பி பழனிவேல், இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் ரெட்டியார்பாளையம் கமலம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் 4வது மாடியில் உள்ள போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ராஜா (எ) வள்ளியப்பன் வீட்டில் நீதிமன்றம் அனுமதி பெற்று நேற்று முன்தினம் சோதனை நடத்தியதில் டைரி, ஒரிஜினல் மற்றும் நகல் பத்திரங்கள், மருந்து இன்வாய்ஸ் சீட்டுகள், ஆவணங்கள், விலை உயர்ந்த செல்போன், கம்ப்யூட்டர் சாதனங்கள், ஹார்டு டிஸ்க், 20 பவுன் நகைகள், வைரம் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த போலி மருந்து விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் 10 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு நேற்று முன்தினம் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடலோர பாதுகாப்பு படை எஸ்.பி. நல்லம் கிருஷ்ணராய பாபு தலைமையில் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவில் போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ், ரவுடிகள் தடுப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ், மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போதை பொருள் தடுப்பு பிரிவு ஏஎஸ்ஐ வெங்கட்ராமன், சிபிசிஐடி தலைமை காவலர் இளந்தமிழ், போதை பொருள் தடுப்பு பிரிவு மூவரசன், ரவுடிகள் தடுப்பு படை காவலர்கள் பிரேம், முரளி ஆகிய 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல்துறை தலைமை அலுவலக எஸ்.பி. மோகன்குமார் பிறப்பித்துள்ளார். விரைவில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்க இருக்கிறது.