Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரவு நேர போராட்டத்தை மீண்டும் தொடங்கிய பொதுமக்கள்

காஞ்சிபுரம்: பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரவு நேர போராட்டத்தை, அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் தொடங்கியுள்ளனர். காஞ்சிபுரம் அருகே பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டினம் 13 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 4,800 ஏக்கர் பரப்பளவில் 2வது பசுமை விமான நிலையம் அமைய உள்ளது. இந்நிலையில், விமான நிலையம் அமைவதற்கான அறிவிப்பு வெளியான நாள் முதல், புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் இரவு நேரங்களில் போராட்டம், உண்ணாவிரதம், பேரணி, சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சிறப்பு தனி நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள், நியமிக்கப்பட்டு, இதற்கான அறிவிப்பு ஒவ்வொரு கிராமமாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 600வது போராட்டம் என்பதால் ஏகனாபுரம் கிராமமக்களும், பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு கூட்டு இயக்கம் குழுவினரும் விளை நிலங்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, 600வது போராட்டத்துடன் நிறுத்திக்கொண்டு, சட்ட போராட்டத்தை தொடங்க உள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்திருந்தனர். அதன்படி போராட்ட குழுவினர், கிராம மக்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல், விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை மீண்டும் தொடங்கினர். அப்போது, தினமும் நடக்கும் இரவு நேர போராட்டத்தையும், அதனுடன் சட்ட போராட்டத்தையும் நடத்த உள்ளதாக பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு கூட்டு இயக்க குழுவினர் தெரிவித்துள்ளனர்.