பொதுப்பணித்துறையில் மீதமுள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், பொருநை அருங்காட்சியகப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். சட்டமன்றப்பேரவை விதி 110ன் கீழ், முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். “வீரம் விளைந்த திருநெல்வேலி நகரத்தை ஒட்டி பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்’’ என்று அறிவித்தார். இதை தொடர்ந்து, முதலமைச்சரால், 18.5.2023 அடிக்கல் நாட்டப்பட்டது.
திட்ட மதிப்பீடு ரூ.33 கோடியில், 13 ஏக்கர் பரப்பளவில், 54,000 சதுர அடி கொண்ட 7 பகுதியாக கட்டப்பட்டுள்ளது. பொருநையில் கட்டப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்தில், சிவகளைப் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த ஓர் கட்டிடமும், ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த 2 கட்டிடமும், கொற்கைப் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த 2 கட்டிடமும் மற்றும் சுகாதார வசதிகள் கொண்ட கட்டிடங்களும் கட்டப்பட்டது.
பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மீதமுள்ள அனைத்துப் பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, முதன்மை தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் மணிகண்டன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.