Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் காந்தி மண்டப வளாகத்தில் வேகமாக மேம்பாட்டு பணி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் காந்தி மண்டப வளாகத்தில் மேம்பாட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகம் சுமார் 18.42 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தேசத் தலைவர்களின் நினைவிடங்கள் மற்றும் சிலைகள் நிறுவப்பட்டு, பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. காமராஜர் நினைவிடம், காமராஜர் சிலை, எம்.பக்தவச்சலம் நினைவிடம், இரட்டைமலை சீனிவாசன் நினைவிடம், காந்தி மண்டபம் நூலகம் மற்றும் அருங்காட்சியகம், தியாகிகள் மணிமண்டபம், ராஜாஜி நினைவிடம் நூலகம் மற்றும் அருங்காட்சியகம், மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம், காந்தியடிகள் சிலை, சங்கரலிங்கனார் சிலை, செண்பகராமன் சிலை, ஆர்யா (எ) பாஷ்யம் சிலை மற்றும் திறந்தவெளி கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ல் ரூ.1 கோடியே 48 லட்சம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மண்டபங்களை புதுப்பித்தல், நடைபாதைகளை மேம்படுத்துதல், மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் பொதுப்பணித்துறையால் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. 2022-23ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வளாகத்தில் ரூ.18 லட்சம் செலவில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலையும், ரூ.34 லட்சம் செலவில் மருது சகோதரர்கள் சிலையும், ரூ.43.43 லட்சம் செலவில் வ.உ.சிதம்பரனார் சிலை மற்றும் செக்கு மண்டபம் சீரமைத்தல் ரூ.17.50 லட்சம் செலவிலும், சுப்புராயன் சிலை ரூ.148.12 லட்சம் செலவிலும், ரூ.2 கோடியே 48 லட்சம் செலவில் அயோத்திதாச பண்டிதர் புதிய மணிமண்டபமும் திறந்து வைக்கப்பட்டது.

காந்தி மண்டப வளாகத்தை சீரமைக்கும் வகையில், பொதுப்பணித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களால் கடந்த 8ம் தேதி கள ஆய்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளை தவிர, பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இந்த வளாகத்திற்கு கூடுதலாக குடிநீர் வசதி, சிறப்பு மராமத்து பணிகளான சேதமடைந்த நடைபாதை சீரமைத்தல், பூங்காக்களுக்கு தண்ணீர் வசதி, மின் மோட்டார் சீரமைத்தல், வளாகம் முழுவதும் சுத்தபடுத்தும் பணி, தண்ணீர் சேமிப்பு தொட்டி அமைத்தல், புல்வெளி மற்றும் பூங்கா பராமரிப்பு, நுழைவாயில் மற்றும் பெயர் பலகைகளை சீரமைத்தல் மற்றும் புதிதாக குப்பை சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், வெளிப்புற மின் விளக்கு, மின் பெட்டிகள் மற்றும் மின் புதைவழி கேபிள் சீரமைத்தல், புதிய மின் கோபுர விளக்குகள், புதைவழி கேபிள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருகிறது.