*புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
கடலூர் : கடலூர் பிரதான சலையில் செயலிழந்துள்ள சிசிடிவி கேமராக்களை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாநகராட்சி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அந்த வகையில், மக்கள் தொகையும், வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக நகரின் பிரதான சாலைகளான முதுநகர் சாலை, லாரன்ஸ் சாலை, பாரதி சாலை, நேதாஜி சாலை, நெல்லிக்குப்பம் சாலைகளில் காவல்துறை சார்பில் முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக குற்றச் சம்பவங்கள் குறைந்ததுடன், விபத்து, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் துப்பு துலக்க காவல்துறைக்கு உதவியாக இருந்தது. குறிப்பாக, பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதன் காரணமாக குற்றச்சம்பவங்கள் பெருமளவு குறைந்தன.
இந்நிலையில், முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஒவ்வொன்றாக பழுதடைந்த நிலையில், தற்போது பெரும்பாலான இடங்களில் கண்காணிப்பு செயலிழந்துள்ளது. இதனால், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு வசதியாக உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, கடலூர் மாநகரில் அனைத்து சிசிடிவி கேமராக்களையும் புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் உதவியை நாடும் காவல்துறை
கடலூர் மாநகரில் பல்வேறு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் தற்போது, ஆல்பேட்டை செக்போஸ்ட், மஞ்சக்குப்பம் தபால் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. பெரும்பாலான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதாகி உள்ளன.
இதனால் விபத்து மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு துப்பு துலக்க தனியார் உதவியை காவல்துறை நாடும் நிலை உள்ளது. அதுபோன்ற, சமயத்தில் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என தனியார் அச்சப்படும் நிலையில், தங்கள் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என தெரிவிக்கின்றனர். இதனால், வழக்கில் துப்புதுலக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.


