ஊட்டி : ஊட்டி படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள நடைபாதையில் ஓரத்தில் வெட்டப்பட்ட செடி கொடிகள் முறையாக அகற்றப்படாததால் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா தலங்களில் தாவரவியல் பூங்காவிற்கு அடுத்த படியாக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக படகு இல்லம் உள்ளது.
ஊட்டி ஏரியில் அமைந்துள்ள படகு இல்லத்தில் இருந்து படகு சவாாி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஊட்டி பஸ் நிலையம் அருகே படகு இல்லம் உள்ளதால் சில சுற்றுலா பயணிகள் நடந்தே சென்று வருவார்கள்.
இதற்காக பஸ் நிலைய பகுதியில் இருந்து படகு இல்லம் வரை நடைபாதை உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி காந்தல் செல்ல கூடிய பொதுமக்களும் பயன்படுத்துவார்கள். இந்நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே நடைபாதையின் பக்கவாட்டில் வளர்ந்திருந்த முட்புதர்கள் அண்மையில் வெட்டி அகற்றப்பட்டன.
இந்த செடிகள் முறையாக அப்புறப்படுத்தாமல் நடைபாதையிலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சாலையிலேயே நடந்து செல்ல கூடிய சூழல் நிலவுகிறது. எனவே நடைபாதையில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.