19 மாகாணங்கள் சார்பில் எச்-1பிக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் எதிர்த்து வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல்
நியூயார்க்: இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் எச்-1பி விசாக்களை இனி புதிதாக பெறுபவர்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக அதிபர் டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் உயர்த்தியது. அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து 19 மாகாண நிர்வாகங்கள் சார்பில் அமெரிக்காவின் மாசசூட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிஷியா ஜேம்ஸ் உட்பட 19 அட்டர்னி ஜெனரல்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் கூறுகையில், ‘‘எச்-1பி விசாக்கள் மூலம் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் அமெரிக்கா முழுவதும் தேவைப்படும் சமூகங்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர். தற்போது இதற்கான விசா கட்டணம் 1 லட்சம் டாலராக அதிகரிக்கப்படுவது சட்டவிரோதமான முடிவு.
இந்த நடவடிக்கை சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கும். இத்துறைகளில் அத்தியாவசிய சேவைகளை வழங்க எச்-1பி தொழிலாளர்களைச் சார்ந்துள்ள அரசு மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு புதிய கட்டணம் இந்தத் திட்டத்தை அணுக முடியாததாக மாற்றிவிடும். இதனால், நியூயார்க் மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பது கடினமாகும். நமது குழந்தைகளின் கல்வி சீர்குலைக்கும். நமது பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும்’’ என்றார்.


