சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, ராயபுரத்தில் புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் என்னும் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இதனைச் சுற்றி 170 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தேவாலயத்துக்கு சொந்தமான சொத்துகள், அங்குள்ள சேசு சபை நிர்வாகியின் பெயரில் உள்ளது. இந்த நிலையில் தேவாலயத்தின் அருகில் உள்ள 2 வீடுகளை தனிநபருக்கு விற்க சபை நிர்வாகி ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பொதுமக்கள் கடந்த மே மாதம் 30ம் தேதி தேவாலய வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக கலெக்டர் மற்றும் கிறிஸ்தவ சபை நிர்வாகியிடம் மனு அளித்தனர்.
ஆனால், நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிறுமணி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் நேற்று மீண்டும் தேவாலயம் முன் கூடினர். பின்னர் பிரச்னைக்குரிய இரண்டு வீடுகளையும் பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவலறிந்த வந்த சோழவந்தான் எஸ்.எஸ்.ஐ.அழகர்சாமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ‘பிரச்சினைக்குரிய வீடுகள் விற்பனை செய்யப்படாது என உறுதியளித்ததை தொடர்ந்து பூட்டுக்களை திறந்து விட்டு கலைந்து சென்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஆலயச் சொத்துக்களை தனிநபருக்கு விற்காமல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆண்டுதோறும் புனித ஜெர்மேனம்மாள் ஆயத்தில் நடக்கும் விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் தங்க வசதியின்றி அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு மண்டபம் கட்டிக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தும் சபை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ஊராட்சி நிர்வாகம் சார்பில் மண்டபம் கட்ட முன்வந்தும் இவர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால், ஆலயம் அருகில் உள்ள இரண்டு வீடுகளை, தனி நபருக்கு விற்பனை செய்ய ஏற்பாடு நடந்து வருகின்றது. இதை கண்டித்தே ஆர்ப்பாட்டம் நடத்தினோம்’ என்றனர்.