ஜெய்ப்பூர்: பள்ளி நிகழ்ச்சியின் போது பெண்கள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜ எம்.எல்.ஏ பால்முகுந்த் ஆச்சார்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லீம் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தானில் பா.ஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ஹவா மஹால் தொகுதி எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா. பா.ஜவை சேர்ந்த இவர் ஜன.26ம் தேதி அங்குள்ள அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஏராளமான மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்திருந்ததை கண்டு ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நேற்று சுபாஷ் சவுக் காவல் நிலையத்திற்கு வெளியே சாலையை மறித்து பாஜ எம்எல்ஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஆதர்ஷ் நகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரபீக் கானும், ராஜஸ்தான் சட்டசபையில் இந்த பிரச்னையை எழுப்ப முயன்றார், ஆனால் சபாநாயகர் அவரை பேச அனுமதிக்கவில்லை.
+
Advertisement