*போலீசார் பேச்சுவார்த்தை
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பழங்குடி இருளர்கள் குடியிருப்பில் கடந்த ஒருவருடமாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் மனுக்களை பெற்றனர். அப்போது மாதம்பூண்டியை சேர்ந்த பழங்குடி இருளர் சமூதாயத்தை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் மனுஅளிக்க வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறினர்.
இதனை தொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியில் சுமார் 62 பழங்குடி இருளர் சமுதாயத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.
கடந்த ஓராண்டாக எங்களுக்கு குடிநீர் வசதி செய்துகொடுக்கவில்லை. பலமுறை மனுஅளித்தும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனுஅளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆட்சியர் இந்த மனுமீது நடவடிக்கை எடுத்து குடிநீர்வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


