குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அட்டடி பகுதியை சேர்ந்த குருமூர்த்தி மகன் ராஜேஸ் கண்ணா (17). பிளஸ்-2 படித்து வந்தார். இவர் குன்னூர் மவுண்ட் ரோட்டில் சிவக்குமார் (35) என்பவர் நடத்தி வந்த ஜிம்மில் சேர்ந்து கடந்த சில நாட்களாக உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது உடல் எடையை கூட்டவும், கட்டுகோப்பான உடற்கட்டை பெறவும் ஜிம் மாஸ்டர் புரோட்டின் பவுடர் எடுத்து கொள்ள வேண்டும் என கூறி, ரூ.4 ஆயிரம் மதிப்பிலான புரோட்டின் பவுடரை வாங்க வைத்துள்ளார். அந்த புரோட்டின் பவுடரை சாப்பிட துவங்கியதிலிருந்து ராஜேஸ்கண்ணாவின் முகம் மற்றும் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டது.
இதனால் உடல் அவலட்சணமாக காட்சி அளிப்பதாக நினைத்த, ராஜேஸ் கண்ணா கடந்த 1ம் தேதி வீட்டில் தீக்குளித்தார். பெற்றோர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த 12ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் திடீர் திருப்பமாக ராஜேஸ்கண்ணா சாப்பிட்டு வந்த புரோட்டின் பவுடர் குறித்து மருத்துவர்களிடம் தந்தை குருமூர்த்தி விசாரித்த போது, அதிக அளவு புரோட்டின் உள்ளதால் இது உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் என்பது தெரியவந்தது. இது குறித்து குன்னூர் போலீசில் தந்தை குருமூர்த்தி புகார் செய்தார். போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக ஜிம் மாஸ்டர் சிவக்குமார் மீது வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.