*விவசாயிகள் கோரிக்கைக்கு ஆர்டிஓ பதில்
ராணிப்பேட்டை : திமிரி ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைக்கு ஆர்டிஓ பதில் அளித்தார்.
ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாய குறைத்தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ ராஜராஜன் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.
அப்போது கலவை, திமிரி பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மோசூர் பகுதியில் உள்ள அரசு மதுப்பான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்காடு தாலுக்கா கோடாளி கிராமத்தில் சுடுகாடு பாதைக்கு மின் விளக்கு அமைக்க வேண்டும். மேலும் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நில அளவையர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். மழைக்காலம் ஆரம்பம் ஆக உள்ளதால் வாலாஜா பாலாறு அணைக்கட்டு பகுதியில் நடக்கும் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாணாபாடி- எடப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் முன்பு உள்ள பழமை வாய்ந்த புளியமரம் விழும் நிலையில் உள்ளது அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இவைகள் தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்டிஓ தெரிவித்தார்.இதில் விவசாயி, ‘திமிரி ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ, ‘அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’ என்றார்.மேலும் விவசாயிகள், ‘தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் சிட்டா வைத்து பயிர் கடன் வாங்குகின்றனர். பயிர் கடன் காலம் முடிவதற்குள் பயிர் கடன் திரும்ப செலுத்த வங்கி மூலம் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
அந்த கடனை அடைக்க விவசாயி நகையை வங்கியில் அடமானம் வைத்து பயிர் கடனை அடைக்கின்றனர். இந்த நிலையில் மீண்டும் பயிர் கடன் பெற விவசாயி கூட்டுறவு வங்கிக்கு சென்றால் அங்கு சிபில் ஸ்கோர் கேட்கின்றனர்.
மேலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலம் தடையில்லா சான்று கேட்கின்றனர். அப்போது நகை கடன் பெற்றதால் அந்த கடன் நிலுவையில் உள்ளது சிபில் ஸ்கோர் இல்லை என தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் மீண்டும் பயிர் கடன் பெற முடியாமல், விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் கேட்பதை தவிர்க்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.