Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சமூக அங்கீகாரத்தை ஏற்படுத்தி திருநங்கைகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

* கடலூர் ஆட்சியர் தகவல்

கடலூர் : திருநங்கைகளுக்கென சமூக அங்கீகாரத்தினை ஏற்படுத்தி பொருளாதார மேம்பாட்டிற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என ஆட்சியர் பேசினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகள் தினத்தினை கொண்டாடும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்து, திருநங்கைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது: சமூக பாகுபாடு, குடும்ப நிராகரிப்பு மற்றும் திருநங்கைகளுக்கு எதிராக நீண்டகாலமாக நிலவும் பாகுபாடு காரணமாக பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் நாடோடி வாழ்க்கையை நடத்தவும் கட்டாயப்படுத்தபடுகிறார்கள்.

குடும்பங்களை விட்டு வெளியேறும் திருநங்கைகளின் வாழ்வை மேம்படுத்திடவும், அனைவரையும் உள்ளடக்கிய சமமான வளர்ச்சியை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். திருநங்கைகளுக்கென சமூக அங்கீகாரத்தினை ஏற்படுத்தி பொருளாதார மேம்பாட்டிற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு திருநங்கைகள் நலன் கருதி சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களை சமூகத்தில் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் 2008ல் அமைக்கப்பட்டது.

திருநங்கைகள் கண்ணியமான வாழ்க்கையை வாழ உறுதி செய்வதற்காக திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் துவங்க மானியத்தொகை, கல்வி உதவித்தொகை, சுய உதவிக் குழு பயிற்சி மற்றும் மானியத்தொகை, காப்பீட்டு திட்ட அட்டை, வீட்டுமனை பட்டா, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 316 திருநங்கைளுக்கு அடையாள அட்டை, 61 திருநங்கைகளுக்கு ஓய்வூதியம், 41 திருநங்கைகளுக்கு சுயதொழில் துவங்க மானியம் மற்றும் புதியதாக 8 திருநங்கைகளுக்கு இணையதளத்தில் மானியம் வழங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

24 திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. மேலும், 131 திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் 210 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களை சமூகத்தில் ஓர் அங்கமாக மாற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ம் நாள் திருநங்கையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2025ம் ஆண்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து திருநங்கையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அதனடிப்படையில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு நடனப்போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் ராஜசேகரன், பேபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.