வேலூர்: வேலூரில் உள்ள தனியார் கல்லூரி துணை முதல்வர் மீது பேராசிரியை பாலியல் புகார் அளித்தார். துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் அன்பழகன். அக்கல்லூரியில் பணியாற்றும் ஒரு பெண் பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் புகார் மனு அளித்தார். அதன்பேரில் வேலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு கல்லூரி துணை முதல்வர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த கல்லூரியின் துணை முதல்வர் அன்பழகன், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் வழக்குப்பதிவு செய்து 5 நாட்கள் ஆகியும் மகளிர் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர். கல்லூரி வளாகத்தில் துணை முதல்வரை பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக கோஷமிட்டபடி சென்று அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


