Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 தனிப்படை அமைத்து கொலையாளிக்கு வலை கோரமங்களாவில் இளம்பெண் கொலை வழக்கு: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

பெங்களூரு: பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை பதறவைத்துள்ளது. கொலையாளியை போலீசார் அடையாளம் கண்ட நிலையில், அவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு கோரமங்களா விஆர் லே அவுட்டில் உள்ள ஒரு பெண்கள் தங்கும் விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கிருத்தி குமாரி என்ற 24 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த கிருத்தி குமாரி பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். வேறு விடுதியில் இருந்து அண்மையில் தான் இந்த விடுதிக்கு கிருத்தி குமாரி மாறி வந்திருக்கிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 11.10 மணியளவில் விடுதியின் 3வது மாடியில் கிருத்தி குமாரி தங்கியிருந்த அறை வாசலில் அவர் கொலை செய்யப்பட்டார். கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கிருத்தி குமாரி கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து இரவு 12 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளியை அடையாளம் கண்ட போலீசார், அவரை தீவிரமாக தேடிவருகின்றனர். அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது. கிருத்தி குமாரியின் அறை கதவை தட்டிவிட்டு வாசலில் நின்ற வாலிபர், கிருத்தி குமாரி கதவை திறந்ததும் அவரை வலுக்கட்டாயமாக இழுக்க, கிருத்தி குமாரி அவருடன் மல்லுக்கட்டினார். உடனே தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியால் கிருத்தி குமாரியின் கழுத்தில் பலமுறை குத்தியும், பின்னர் கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்துவிட்டு கொலையாளி தப்பியோடிவிட்டான்.

இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகின. கத்தியால் குத்தப்பட்ட கிருத்தி குமாரி உதவி கேட்டு கதறினார். ஆனாலும் எந்த பயனுமில்லை. விடுதி காவலாளி இரவு உணவிற்கு சென்ற நேரம் பார்த்து விடுதிக்குள் நுழைந்த கொலையாளி இரவு 11.10 - 11.30 மணிக்குள் கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறான். இந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்துவரும் போலீசார், கொலையாளி யார் என்று அடையாளம் கண்டுள்ளனர்.

கொலை செய்த வாலிபர் பெயர் அபிஷேக். மத்திய பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்த இவர், ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அந்த பெண்ணும் கிருத்தி குமாரியும் விடுதி ஒன்றில் ஒரே அறையில் தங்கியிருக்கின்றனர். அபிஷேக் வேலையிலிருந்து நின்றதுடன், வேறு வேலை எதுவும் செய்யாமல் இருந்துவந்ததுடன், வேலைக்காக போபாலுக்கு செல்வதாக பொய் சொல்லியிருக்கிறார். அபிஷேக்கின் செயல்பாடுகளால் அவரது காதலி அவரை விட்டு விலக தொடங்கியிருக்கிறார்.

அதனால், அந்த பெண் தங்கியிருந்த விடுதிக்கு சென்று சத்தம் போட்டு அபிஷேக் பிரச்னை செய்து வந்திருக்கிறார். கிருத்தி குமாரியும் அந்த பெண்ணும் தங்கியிருந்த விடுதிக்கு நேரடியாக சென்று அபிஷேக் பிரச்னை செய்துவர, இந்த பிரச்னையிலிருந்து வெளிவர அந்த பெண் கிருத்தி குமாரியின் உதவியை நாடியிருக்கிறார்.

இதையடுத்து கிருத்தி குமாரி அந்த பெண்ணை வேறு விடுதியில் தங்கவைத்துவிட்டு, கிருத்தி கோரமங்களாவில் உள்ள விடுதிக்கு மாறியிருக்கிறார். அபிஷேக் காதலிக்கு போன் செய்ய, அந்த பெண் போனை எடுக்கவில்லை. பலமுறை போன் செய்தும் எடுக்காததால், தனது காதலியை பிரிய கிருத்தி குமாரி தான் காரணம் என்று எண்ணிய அபிஷேக், கிருத்தி குமாரி இருக்கும் விடுதியை கண்டுபிடித்து வந்து அவரை கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

* 3 தனிப்படை அமைப்பு:

கிருத்தி குமாரியை கொலை செய்த அபிஷேக்கை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் பெங்களூருவை விட்டு அவர் வெளியேறவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொலையாளி அபிஷேக்கை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த் கூறியுள்ளார்.