8வது முறையாக வரும் 15ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்: திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
சென்னை: பிரதமர் மோடி 8வது முறையாக வரும் 15ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் திருநெல்வேலியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பிரதமர் மோடி 7 முறை தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை 2 நாட்கள் பயணமாக அவர் சென்னை வந்தார். சென்னை வந்த அவர் தி.நகரில் நடந்த ரோடு ஷோவில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் வேலூர், மேட்டுபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி 8வது முறையாக வருகிற 13ம் தேதி (நாளை), 14ம் தேதி (நாளை மறுநாள்) என 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 13, 14ம் தேதிகளில் பிரதமர் மோடி மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் 13, 14ம் தேதிக்கு பதிலாக பிரதமர் மோடி வரும் 15ம் தேதி தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வர உள்ளார்.
அன்றைய தினம் மாலை 3 மணியளவில் திருநெல்வேலி மக்களவை தொகுதி அம்பை சட்டமன்ற ெதாகுதி உட்பட்ட அகஸ்தியபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகிறார். திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதேபோல அருகில் உள்ள தென்காசி, தூத்துக்குடி தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து அந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச வாய்ப்புள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கடைசி பிரசார கூட்டம் இதுவாகும். இதனால், பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த பாஜவினர் திட்டமிட்டுள்ளனர்.