புதுடெல்லி: இந்தியா -பாகிஸ்தான் மோதல் குறித்து அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில் இது குறித்து பிரதமர் தெளிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,
‘‘மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், அதே இரண்டு செய்திகளுடன் 24வது முறையாக அதிபர் டிரம்ப் ஏவுகணை ஏவப்படுகின்றது. அணு ஆயுதங்களை கொண்ட இரு நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான போரை அமெரிக்கா நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகின்றார். இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்பினால் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த முறை அதிபர் டிரம்பின் பரபரப்பான புதிய செய்தி என்னவென்றால் 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்பதாகும். 2019ம் ஆண்டு செப்டம்பரில் ஹவுடி மோடி, 2020ம் ஆண்டு பிப்ரவரியில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிகளுடன், பல ஆண்டுகளாக அதிபர் டிரம்புடன் நட்புறவில் இருக்கும் பிரதமர் மோடி, கடந்த 70 நாட்களாக அமெரிக்க அதிபர் கூறி வருவது குறித்து நாடாளுமன்றத்தில் தெளிவான மற்றும் திட்டவட்டமான அறிக்கையை வெளியிட வேண்டும்” என்றார்.