Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் கனவு திட்டத்தை 2029ம் ஆண்டு முதல் செயல்படுத்த பாஜக அரசு தீவிரம்!!

டெல்லி : பாஜகவின் இந்த ஆட்சிக் காலம் முடிவடைவதற்குள் பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் கனவு திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாடாளுமன்றத்தில் நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்ட போதிலும் எதிர்க்கட்சிகளின் வலுவான எதிர்ப்பால் அதனை நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவும் அதன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. முதற்கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதனை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்களை நடத்தவும் பரிந்துரைத்துள்ளது.

கடந்த மாதம் தனது சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்வைத்து பேசினார். தேர்தல்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைகளை உருவாக்குகின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த நிலையில் பாஜகவின் இந்த ஆட்சி காலம் முடிவடைவதற்குள் முன்பாகவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளதாக தெரிகிறது.

பாஜக அரசின் சாதனைகளில் ஒன்றாக இதனை நிறைவேற்றவும் வரும் 2029ம் ஆண்டு முதல் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய இதனையும் நடத்தி சாதனை பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.