Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கேமராக்களின் நிழலில் கூட்டங்களை நடத்தும் பிரதமர் பொருளாதார பிரச்னைகளில் மோடி கவனம் செலுத்த வேண்டும்

* ஒன்றிய அரசின் தோல்விகளை பட்டியலிட்டு கார்கே கடும் தாக்கு

புதுடெல்லி:காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் நேற்று பதிவிடுகையில், ‘‘மோடி அரசின் கொள்கைகளால் கோடிக்கணக்கான மக்கள் வேலையில்லா பிரச்னை,பணவீக்கம் மற்றும் சமத்துவமின்மை குழிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். வேலையின்மை விகிதம் 9.2 சதவீதம் இருப்பதால், இளைஞர்களின் எதிர்காலம் பயனற்றதாக உள்ளது. 20 முதல் 24 வயதுடையவர்களில், வேலையின்மை விகிதம் 40% ஆக உயர்ந்துள்ளது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாகவும், குறைந்தபட்ச ஆதார விலையில் 50 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் பொய்யாகிவிட்டது.

7 பொதுத்துறை நிறுவனங்களில் 3.84 லட்சம் அரசு வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களில் பெரும்பாலான அரசு பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இது தலித்,பழங்குடியினர்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இடஒதுக்கீடு பதவிகளுக்கான வேலைகளையும் இழக்க வழிவகுத்தது. கடந்த 10 ஆண்டுகளில் தனியார் முதலீடும் வெகுவாகக் குறைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் புதிய தனியார் முதலீட்டுத் திட்டங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூ.44,300 கோடியாகக் குறைந்தது. பணவீக்கம் உச்சத்தில் உள்ளது.

பருப்பு, அரிசி, பால், சர்க்கரை, உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. குடும்ப சேமிப்பு 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார சமத்துவமின்மை உள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் ஊதிய வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது.

அடிப்படை பிரச்னைகளில் இருந்து அரசாங்கம் விலகி இருப்பதற்காக பொது தொடர்பு சாதனங்களை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். ஆனால் மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பொறுப்புகூறலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.