Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் மோடி 3.0 ஆட்சியின் 100 நாட்கள் நிறைவு..முக்கியப் பிரச்சனைகளில் யூ டர்ன் அடித்த ஒன்றிய அரசு: காங்கிரஸ் விமர்சனம்!!

டெல்லி: மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றுள்ள மோடி தலைமையிலான அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. பிரச்சனைகளில் இருந்து தப்பியோடும் யூ டர்ன் ஆட்சியாகவே மோடியின் அரசு உள்ளது என காங்கிரஸ் கட்சி விமர்சித்து உள்ளது. ஜூன் 10ம் தேதி மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் போதே நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு மோசடி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. முதலில் நீட் வினாத்தாள் கசிவு மோசடி நடைபெறவே இல்லை என்று ஒன்றிய அரசு அடியோடு மறுத்தது.

ஆனால், நீட் வினாத்தாள் கசிவினையும், மோசடிகளையும் எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்திய பிறகு வினாத்தாள் கசிவு மோசடியை ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பின்வாங்கியது மோடி அரசு. அரசு பணியில் இல்லாதவர்கள் லேட்டர் என்ட்ரி முறையில் நேரடியாக ஒன்றிய அரசின் உயர் பதவிகளில் நியமிப்பதற்கான அறிவிப்பை மோடி அரசு வெளியிட்டது. லேட்டர் என்ட்ரி முறை மூலமாக அரசு பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நியமிக்கப்படுவதாகவும், இட ஒதுக்கீட்டை முறையை ஒளிக்க சதி நடப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், லேட்டர் என்ட்ரி திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டது.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய மசோதா, ஒளிபரப்பு சேவை ஒழுங்குமுறை மசோதா போன்றவையும் கடும் எதிர்ப்புக்கு பிறகு கிடப்பில் போடப்பட்டன. ஒன்றிய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கே திரும்பின. இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறாக ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது.

முடிவுகளை எடுத்து விட்டு பின்வாங்குவது மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றுள்ள மோடி புதிய சாதனை படைத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவதும், எல்லையில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுவதும் தொடர் கதையாகி விட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன. கடந்த 100 நாட்களில் ரயில்கள் தடம் புரண்ட விபத்துகளில் 21பேர் உயிரிழந்து இருப்பது பற்றியும், தீவிரவாத தாக்குதல்களில் 21 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தது பற்றியும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.